மும்பையில் குறைந்தது மழையின் தீவிரம் - இயல்பு வாழ்க்கையை நோக்கி நகரும் மக்கள்

மும்பையில் குறைந்தது மழையின் தீவிரம் - இயல்பு வாழ்க்கையை நோக்கி நகரும் மக்கள்

மும்பை:

மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள போதிலும், மழைப்பொழிவு குறைந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கையை நோக்கி நகரத் தொடங்கினர்.


மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்த நிலையில், மும்பை, பால்கர், ராய்காட் மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், மும்பையில் மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதோடு, தானே மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தானே மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்தார்.


செவ்வாய்கிழமை காலை முதலான 24 மணி நேரத்தில் மும்பையின் சில பகுதிகளில் 250 மிமீ மழை பதிவாகி உள்ளது. புறநகர் பகுதிகளான விக்ரோலியில் 262 மிமீ மழை பதிவாகி உள்ளது. கங்கன், காட் பகுதிகளில் அதிக கனமழை பதிவாகி உள்ளது.


மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இன்று மழை சற்று குறைவாகவே உள்ளது. இன்று காலை முதல், சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து தொடங்கியதை அடுத்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கி உள்ளனர். மும்பையின் முக்கிய பகுதியான அந்தேரியில் கடந்த சில நாட்களாக கடைகளை மூடியே வைத்திருந்த வணிகர்கள், இன்று கடைகளை திறந்தனர். கடைகளின் உள்பகுதியையும், வீதிகளையும் அவர்கள் சுத்தப்படுத்தினர்.


நாளை (வியாழக்கிழமை) முதல் மழையின் தீவிரம் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பையில், சாலைகளில் மழை நீர் தேங்குவது குறைந்துள்ளது. சாலைகளில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. ரயில் இயக்கம் தற்போது மேம்பட்டுள்ளது. அதிகாலை 3 மணி முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளன.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%