முற்பகல் செய்யின்

முற்பகல் செய்யின்


நன்கு ஆழமாக யோசித்துப் பார்த்தாள் கோமதி. கடைசிவரைப் புரியவில்லை.   


"அம்மா கொஞ்சம் பூ வாங்கிக்க மா" பூ விற்பவர் கேட்க

"இருக்குப்பா. நாளைக்கு வாங்கிக்கறேன்" என்று சொல்லிவிட்டு நடந்தாள்.


ஏழரை மணிக்கு வீட்டுக்கு வந்தபோது மனமும் உடலும் சோர்ந்திருந்தது.


"குளிச்சிட்டு வரியாமா, டிபன் எடுத்து வைக்கட்டுமா? அம்மா கேட்டாள்.

"இதோ ஒரு அஞ்சு நிமிஷம் மா" என்று சொல்லி அம்மா கொடுத்த காபியை குடித்துவிட்டு கோமதி குளியலறைக்குள் சென்றாள்.


எத்தனை குவளை தண்ணீர் விட்டுக் கொண்டாலும் உள்ளக் கொதிப்பு அடங்கவில்லை. வெளியில் வந்து உடுப்பு மாற்றிக் கொண்டு வந்து அமர்ந்தாள். அம்மா கொடுத்த இட்லி, சட்டினியைச் சாப்பிட்டு விட்டு அப்பாவின் அறைக்குள் சென்று "கிளம்பட்டுமாப்பா?" என்றாள்.


"சரிம்மா, பார்த்து போமா. கடவுள் இருக்கான். பார்த்துப்பான். நம்ப கையில ஒன்னுமில்ல" என்றார்.


"எப்பிடிப்பா? எப்பிடி முடியுது ஒங்களால? எனக்கு ஒன்னுமே புரியலப்பா" என்றாள்.


"எல்லாம் விதிம்மா. நான் நெனச்சுக்கூடப் பாக்கல. அவனுக்கு எப்பிடி மனசு வந்ததுன்னு தெரில. பாப்போம். நீ ஆபீசுக்கு போய்ட்டு வாமா" என்றார்.


அன்று ஸ்கூட்டரை எடுக்கவில்லை. ராபிடோ புக் செய்து கொண்டாள். மனம் ஏனோ ஒரு நிலையில் இல்லை. பதினோறு மணிக்கு டீ டைமில் எழுந்து போய் முகம் அலம்பிக் கொண்டு டீயும் இரண்டு பிஸ்கட்டும் சாப்பிட்டாள்.  


மாலையில் ஆபீஸ் முடிந்ததும் மோஹனாவுடன் சேர்ந்து அருகில் இருக்கும் பார்க்கிற்கு சென்றாள். நடந்தவற்றைச் சொன்னாள். "என்ன கோம் சொல்ற? நிஜமாவா? காலைலேந்தே பாத்தேன். நீ எப்போதும் போல இல்லை. என்னப்பா இது? ஆச்சர்யமா இருக்கு?" --மோஹனா.


"ஆமாம் மோஹி, வீட்ல அப்பாவையும் அம்மாவையும் பாக்க முடில. ஒடஞ்சுப் போயிட்டாங்க. நா என்ன செய்யப் போறேன்னு தெரில" என்றாள் கோமதி.


"பொறுமையா யோசிச்சு பேசு. ஒங்கண்ணனுக்கு புரிய வை. என்ன சொல்றதுனு தெரியலியேப்பா" மோஹனா சொன்னாள்.


மாலை வீடு திரும்பியதும் கோமதி கொஞ்சம் நிதானித்து அண்ணனுக்கு போன் செய்தாள்.


"என்ன பரத் எப்பிடி இருக்க? என்ன பன்ற?


"நா பன்றது இருக்கட்டும். நீங்க என்ன முடிவு பண்ணினீங்க? அதப்பத்தி மட்டும் பேசு" என்றான்.


"அதான் அது வந்து அப்பாவுக்கு அந்த ஜுரத்துக்கப்புறம் வலது பக்கம் முழுசுமே வராம போயிடுச்சு. வேலைக்கும் போகல. படுத்த படுக்கையா ஆயிட்டாரு. ஏதோ ஒரு ட்ரீட்மென்ட் பண்ணிக்கிட்டே இருக்கோம். ஆக்சுவலா எனக்கு கல்யாணத்துக்கு எடுத்து வச்சதிலேந்துதான் செலவு பண்றேன். இப்பப் போய் நீ இப்படி சொல்ற. அப்பா நீ வந்து பாக்கணும்னு ஆசைப்படறார்" கோமதி சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்து,  


"யார் செலவு பண்ணுவா? இவரை வந்துப் பார்த்து என்ன ஆகப்போகுது? ஆக வேண்டியதைப் பாருங்க மொதல்ல" என்றான்.


அப்படி என்னதான் கேட்டான் பரத்? நன்கு படித்து பட்டம் வாங்கி வெளிநாட்டு வேலை, செட்டிலாகியிருந்தான்.


வீட்டிற்கு பணமெல்லாம் அனுப்பவில்லை. இவன் படிப்புக்காக வாங்கிய கடனை கூட அப்பாவை அடைக்கச் சொல்லிவிட்டான்.


இரண்டு வருஷமாகிறது. வெளிநாட்டு மோகம், அங்கேயே வேற்று மதத்தை சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான்.


பெற்றோர்களுக்கு எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்தான் மிஞ்சியது. தற்போது சொத்தில் பங்கு கேட்டு நச்சரிக்கிறான்.


கோமதியின் அப்பா வக்கீலுக்கு போன் செய்து வரவழைத்து சிலவற்றைச் செய்யச் சொன்னார்.


எதுவும் தெரியாத நிலையில் கோமதி ஒரு முடிவெடுத்தாள். தான் திருமணம் செய்து கொள்ளாமல் கடைசிவரை அப்பா அம்மாவைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.


வக்கீல் சொன்ன செய்தி இடி விழுந்தாற் போல் ஆனது பரத்திற்கு.

அவனது அப்பா சொத்து, வீடு, நிலம்,நகைகள், பொருட்கள் என எல்லாவற்றையும் கோமதியின் பெயருக்கு மாற்றி எழுதி வைத்துவிட்டார். தங்கை கோமதியைத் தாறுமாறாக அவமதித்துப் பேசி விட்டான். சுடு சொற்களை வீசினான். 


கோபம் முழுவதும் கோமதி மேல் பாய்ந்தது. கோமதி அவன் கோபம் ஜாஸ்தியானதும் "நீ செஞ்சது, ஓனக்கே வந்துது" என்று சொல்லி போனை கட் செய்து விட்டாள்.


வி.பிரபாவதி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%