
மேட்டூர், அக்.22-–
தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணை இந்த ஆண்டில் 7-வது முறையாக நிரம்பியது. தொடர்ந்து 3 நாட்களாக 120 அடியாகவே நீட்டிக்கிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன நீர் ஆதாரமாக மேட்டூர் அணை விளங்குகிறது. இந்த அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 120 அடியாகும். அணையின் மொத்த கொள்ளளவு 93.45 டி.எம்.சி. ஆகும். (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி).
இந்த ஆண்டு ஜூன் மாதம் கர்நாடக மாநிலத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இதனால் அங்கிருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 1¼லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டதன் எதிரொலியாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது.
இதன் காரணமாக கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி இந்த ஆண்டில் முதன்முறையாக மேட்டூர் அணை 120 அடியை எட்டி நிரம்பியது. அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 5, 20 மற்றும் 25-ந் தேதிகளிலும், ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி, செப்டம்பர் மாதம் 2-ந் தேதி என இந்த ஆண்டில் மட்டும் 6 முறை அணை முழுவதும் நிரம்பி இருந்தது.
இதனிடையே வடகிழக்கு பருவமழை எதிரொலியாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்ததன் காரணமாக அணையின் நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்து கொண்டே வந்தது. இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை அன்று மேட்டூர் அணை நீர்மட்டம் காலை 8 மணிக்கு 119.60 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து மதியம் 2 மணிக்கு இந்த ஆண்டில் 7-வது முறையாக 120 அடியை எட்டி நிரம்பியது. இதனால் அணை நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.
இந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக இருந்தது.
தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 3-வது நாளாக இன்று காலை 120 அடியாக நீடிக்கிறது. மேலும், அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 35,500 கன அடியாக நீடிக்கிறது. அணையிலிருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18,300 கனஅடி வீதமும், உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 16,700 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதனால் காவிரி கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?