லைக்கு

லைக்கு


சரியாக மதியம் ஒரு மணிக்கு சங்கரலிங்கத்தின் வேன் அந்த மைதானத்தில் வந்து நிற்க, காத்திருந்த பிச்சைக்காரர்கள் கூட்டம் "திமு...திமு" வென வேனை நோக்கி ஓடி வந்தது.


 "அவசரப்படாதீங்க... அவசரப்படாதீங்க?.. லைன்ல வந்து ஒவ்வொருத்தரா வாங்கிட்டுப் போங்க!" சங்கரலிங்கம் தன் மென்மையான குரலால் அவர்களைக் கட்டுப்படுத்தினார்.


வேனிலிருந்து இறக்கப்பட்ட மேஜையை அங்கே போட்டு, அதில் உணவு பதார்த்தங்கள் அடங்கிய பாத்திரங்களை வைத்து, எல்லோருக்கும் பாக்கு மரத்தட்டு கொடுத்து வரிசையாக வர வைத்து தானே உணவைப் பரிமாறினார் சங்கரலிங்கம்.


சற்று தொலைவில் நின்று இந்தக் காட்சியை கவனித்த சுதாவுக்கு எதுவுமே புரியவில்லை. "யாரு இவர்?... எதுக்கு பிச்சைக்காரர்களுக்கெல்லாம் சோறு போடறார்?" தன் சந்தேகத்தை பக்கத்திலிருந்த பெட்டிக் கடைக்காரரிடம் கேட்டாள்.


 "அதுவா?... அவர் பெரிய பணக்காரர் இல்லைங்க... நம்மைப் போல ஒரு சாதாரண ஆள்தான்.. ஆனாலும் தான் சம்பாதிக்கற பணத்தில் தினமும் இங்கு இருக்கிற 30... 40... பிச்சைக்காரர்களுக்குச் சோறு போடுறார்" என்றார் கடைக்காரர்.


 "அதான் எதுக்கு.?"


 உதட்டைப் பிதுக்கிய கடைக்காரர், "தெரியலைம்மா!" என்றார்.


அவரிடம் விடை பெற்றுக் கொண்டு நேரே சங்கரலிங்கத்திடம் சென்ற சுதா அவர் உணவு பரிமாறுவதையும், பிச்சைக்காரர்கள் வரிசையாக வந்து வாங்கிச் செல்வதையும், சாப்பிடுவதையும் தன் மொபைலில் படம் பிடிக்க, அவசரமாய் வந்து தடுத்தார் சங்கரலிங்கம்.


 "நில்லும்மா.. எதுக்கு... எதுக்கும்மா வீடியோ எடுக்கற?"கோபமாய்க் கேட்டார்.


 "உங்களோட சமூக சேவையை... உங்களோட உதவும் குணத்தை வீடியோ எடுத்து சமூக வலை தளத்துல போட்டா... ஆயிரக்கணக்குல லைக் வரும் ... லட்சக்கணக்கான பேர் பாப்பாங்க... உங்க புகழ் உலகம் பூராவும் பரவும்!" கண்களை விரித்துக் கொண்டு சொன்னாள் சுதா.


  "சரி... அதனால இதோ இந்த ஏழைகளோட வயிறு நிரம்புமா?... இவங்க பசியை அந்த லைக்கு தீர்க்குமா?"


 "இல்லைங்க... லட்சக்கணக்கான வியூஸ் வரும் போது உங்களுக்கு அதன் மூலம் வருமானமும் வரும்... புகழும் சேரும்"


 "த பாரும்மா... எனக்கு அந்த லைக்கு... வியூஸு... எதுவும் வேண்டாம்!.. அதோ சாப்பிட்ட திருப்தியில அந்த பெண்மணி சிரிக்கிறாங்களே அதை விடவா அந்த லைக்கு?... இதோ இந்தச் சிறுமி வாயெல்லாம் சோத்தை அப்பிக்கிட்டு கண்களில் கண்ணீர் வர புன்னகைக்குதே அதை விடவா அந்த வியூஸ்?..." சங்கரலிங்கம் சொல்ல.


  "சார்... நீங்க செய்யற சமூக சேவை உலகம் பூராவும் பரவும் போது அதைப் பார்த்து பலர் உங்களை மாதிரியே செய்ய நினைப்பாங்கல்ல?"


  அதைக் கேட்டுச் சிரித்த சங்கரலிங்கம், ' இந்த உலகத்திலே ஏழைகளுக்கு உணவளிக்கணும்... இல்லாதவங்க பசியை போக்கணும்.... என்கிற எண்ணம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து அதுவா வருவது... மத்தவங்க செய்யறதைப் பார்த்து வராது... அப்படி வந்தா அது தர்மம் இல்லை தற்புகழ்ச்சி"


மேற்கொண்டு சுதா ஏதோ சொல்ல வாயெடுக்க, "என்ன பெரியம்மா?.. என்ன வேணும்... சாம்பாரா?" கேட்டுக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தார் சங்கரலிங்கம்.


சுதா சிலையாய் நின்றாள். "இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனிதரா?"


(முற்றும்)



முகில் தினகரன் 

கோயம்புத்தூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%