வி.கே.லக்ஷ்மிநாராயணன்
22, 22 ஏ, ராமகிருஷ்ணா நகர் மெயின் ரோடு
ராமகிருஷ்ணா நகர்
போருர், சென்னை 600 116
அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார் சிவராமன். படிப்பு முடிந்து 24 வயதில் ஒரு
தனியார் துறையில் கிளார்க்காக வேலையில் சேர்ந்து படிப்படியாக பதவி உயர்வுகள் பெற்று கடைசியில் ஏ.ஜி.எம்.மாக பெரிய போஸ்டில் இருந்துகொண்டு ஓய்வுபெருவது என்பது சாதாரண விஷயமில்லை. வேலையில் முழுமையான அர்ப்பணிப்பு, மேலும் கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம் ! அவருக்கு இந்த இரண்டும் இருந்தன. அவற்றைக் கொண்டு முன்னேறினார்.
பிரிவு உபசார விழா அமர்க்களமாக நடந்தது. சந்தன மாலையுடன். சேர வேண்டிய
தொகைக்கான செக்கும் உடனடியாக அவர் கையில் கிடைத்தது. மரியாதை நிமித்
தம் அவரை அலுவலக காரில் வீட்டுக்கு கூட்டி வந்து விட ஆவல் கொண்டனர் நண்பர்கள். ஆனால் சிவராமன் அலுவலக காரை தன் சொந்த உபயோகத்துக்கு எடுக்க மறுத்து விட்டு தன் காரிலேயே தனியாக வீடு வந்து சேர்ந்தார். சந்தன மாலை மற்றும் செக் வைத்திருந்த ரெக்ஸின் பேகை டீபா மீது வைத்து விட்டு மிகுந்த சோர்வோடு சோஃபாவில் அமர்ந்தார்.
" வாப்பா ! ஒரு வழியா வேலையிலிருந்து ரிடையராகிட்டே! நேற்றே இதைப் பற்றி என்கிட்டச் சொல்லியிருந்தே !”
" ஆமாம்மா ! 36 வருஷம் கம்பெனிக்காக உழைச்சேன். போதும் உன் உழைப்புன்னு சொல்லி கல்தா கொடுத்து என்னை அனுப்பிட்டாங்க. "
" ஏம்பா, கல்தான்னு சொல்றே? கம்பெனி உனக்கு பெரிய போஸ்டை தந்து கெளரவ
மா அனுப்பியிருக்கு. எந்த பிளாக் மார்க்குமில்லாம ஒழுங்கா ரிடையராகியிருக்கே.
நீ இப்படி பேசறது சரியில்லை."
" பின் என்னம்மா ! ஒரு வருஷம் எக்ஸ்டன்ஷன் கேட்டேன். கொடுக்க முடியாது போடாங்குற மாதிரி என்னை அனுப்பிச்சுட்டாங்க. என்னைப் பொறுத்தவரை இது கல்தாதான்."
" சரி, நாளையிலேர்ந்து ஆஃபிஸ் கிடையாது . பொழுது கழிக்க என்ன செய்ய உத்தேசம் ?”
“ பொழுதை கழிக்க வழியா இல்ல ? ஃப்ரெண்ட்ஸ் வீடு இருக்கு. லைப்ரரி இருக்கு.
போதாக்குறைக்கு பேச்சுத் துணைக்கு நீ இருக்கே. வேற என்ன வேணும் ?"
" ம்..அதெல்லாம் சரிதான். ஒரு விஷயத்தை மறந்துட்டியே !"
" என்னம்மா ?"
" இல்ல 60 வயசாகியும் நீ கட்டை பிரம்மச்சாரியாகவே காலம் தள்ளிட்டே. காலா காலத்தில் உனக்கொரு கல்யாணம் நடந்திருந்தா இப்போ பேரன் பேத்தியோட சந்தோஷமா பொழுதை கழிக்கலாம் . அதுக்கு வழியில்லாமல் போச்சேன்னு மனசு கிடந்து அடிச்சிக்கிறது சிவராமா!"
" என்னம்மா நீ ! எனக்குப் பிடிக்காத விஷயம் பத்தி பேசாதேன்னு உனக்கு எத்தனை
தடவை சொல்லியிருக்கேன். செக்கு மாடு மாதிரி சுத்தி சுத்தி அங்கேயே வரே !"
கோபத்துடன் சொன்னார் சிவராமன்.
" உன்னைப் பெத்த வயிறுடா! பத்திண்டு எரியறது. அது தாங்காம இப்படி பேச வேண்டியிருக்கு. ஹூம் ! வம்சாவளி உன்னோடயே முடிஞ்சிடப் போறதேன்னு
நினைச்சு வேதனையும் ஏக்கமுமா இருக்கு. நீ என்னடான்னா இப்படி விட்டேர்த்
யாப் பேசறே!"
“இதோபாரும்மா ! காலம் கடந்து போச்சு. இப்போ அதைப் பத்தி பேசறது சரியில்ல. இனிமேல் இது விஷயமா நீ வாயைத் திறந்தால் நான் உன்னோடப் பேசமாட்டேன் …” கண்டிப்புடன் கூறினார் .
அப்போது வீட்டினுள் ஆள் நுழையும் காலடி சப்தம் கேட்டது.
" சரி, சரி, யாரோ வர்றமாதிரி இருக்கு ! நாம அப்புறமா பேசலாம். " மாலையோடு
படத்திலிருக்கும் தன் அம்மாவுடன் வழக்கம் போல் மானசீகமாக பேசிய சிவராமன்
அதோடு உரையாடலை முடித்துக் கொண்டார்.
…………………………………………….