வரதட்சணைக் கொடுமை: நொய்டாவில் மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்ற கணவன் கைது
நொய்டா, ஆக.24–
நொய்டாவில் கட்டிய மனைவியை ரூ. 36 லட்சம் வரதட்சிணைக்காக தாய் உடன் சேர்ந்து அடித்து உதைத்து, தீ வைத்து எரித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிரேட்டர் நொய்டாவில் சிர்சா கிராமப்பகுதியைச் சேர்ந்த விபின் என்பவருடன் கடந்த 2016ம் ஆண்டு நிக்கி என்ற பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது. இந்தக் குடும்பத்தில் நிக்கியின் சகோதரியும் மருமகளாக உள்ளார். விபினின் சகோதரனை திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில், நிக்கி குடும்பத்தினர் ரூ. 36 லட்சம் வரதட்சிணை தரவில்லை என்றுக் கூறி கடந்த வியாழக்க்கிழமை விபின் மற்றும் அவரது தாயார் சேர்ந்து நிக்கியை கடுமையாகத் தாக்கி, நிக்கி மீது ஆசிட் ஊற்றி தீவைத்துக் கொன்றுள்ளனர். இந்த கொடூரமான சம்பவத்தின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த விடியோவில், கணவனும் மாமியாரும் பாதிக்கப்பட்ட பெண்ணைத் தாக்கி, அவரது தலைமுடியைப் பிடித்து வீட்டிற்கு வெளியே இழுத்துச் செல்கின்றனர். இதை நிக்கியின் சகோதரி காஞ்சன் விடியோ எடுத்துள்ளார். ஊடகங்களுக்கு பேட்டி அளித்த நிக்கியின் சகோதரி காஞ்சன், ரூ.36 லட்சம் வரதட்சணை கேட்டு தனது தங்கையை கணவர் விபின் மற்றும் அவரது மாமியார் ஆகியோர் சேர்ந்து கொலை செய்ததாகக் கூறினார்.
என்கவுண்டர் செய்யுங்கள்
சம்பவம் குறித்து உயிரிழந்த பெண்ணின் 6 வயது மகன், “அவர்கள் என் அம்மாவை அடித்தார்கள். அவர் மீது எதையோ ஊற்றினார்கள். பின்னர் அவர் கன்னத்தில் அறைந்தார்கள். அப்புறம் அவர் மீது தீ பற்ற வைத்தார்கள்.” என்று போலீஸிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் தந்தை ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில் கூறியிருப்பதாவது:–
“முதலில் சொகுசுக் கார் வேண்டும் என்றார்கள். வாங்கிக் கொடுத்தோம். பின்னர் புல்லட் வண்டி வேண்டும் என்றார்கள். அதுவும் வாங்கிக் கொடுத்தோம். ஆனால் தொடர்ந்து என் மகளை கொடுமைப் படுத்தியுள்ளனர். அண்மையில் நான் எனக்காக ஒரு சொகுசுக் கார் வாங்கினேன். அதனால் என் மருமகன் விபினுக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது. அதைச் சொல்லிக் காட்டியே என் மகளை கொடுமைப் படுத்தியுள்ளனர். என் பேரனின் கண் முன்னாலேயே என் மகளை அடித்துத் துன்புறுத்தி எரித்துக் கொன்றனர். என் மூத்த மகளையும் அதே குடும்பத்தில் தான் திருமணம் செய்து கொடுத்துள்ளோம். என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் அனைவரையும் என்கவுன்ட்டர் செய்ய வேண்டும், விபினின் வீட்டை புல்டோசர் விட்டு தரைமட்டமாக்க வேண்டும். என்றார்.
இந்த நிலையில் பெண்ணை எரித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். கணவன் குடும்பத்தின் மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.