வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் யாரும் நெருக்கடி அளிக்க முடியாது: மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்
பெர்லின்: அமெரிக்கா உட்பட பல முக்கிய கூட்டாளிகளுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், வர்த்தக ஒப்பந்தத்தை பொறுத்தவரையில் இந்தியாவுக்கு யாரும் நெருக்கடி அளிக்க முடியாது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனிக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பியூஷ் கோயல் பெர்லினில் நடைபெற்ற உலகளாவிய உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
வர்த்தக ஒப்பந்தங்கள் வெறும் சந்தை அணுகல் மற்றும் வரிகள் பற்றியது மட்டுமல்ல. மாறாக நம்பிக்கை, நீண்ட கால உறவுகளை உருவாக்குதல் மற்றும் உலகளாவிய வணிக ஒத்துழைப்புக்கான நிலையான கட்டமைப்புகளை உருவாக்குதல் பற்றியது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
சந்தை அணுகல், சுற்றுச்சூழல் தரநிலை மற்றும் மூல விதிகள் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்தபோதிலும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அவசரப்படமாட்டோம்: இந்திய ஏற்றுமதிகள் மீது 50% வரிகளை விதித்துள்ள அமெரிக்கா மற்றும் மேலும் பல நாடுகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்தியாவைப் பொருத்தவரையில் அவசரமாக எந்த வர்த்தக ஒப்பந்தத்திலும் கையெழுத்திடாது. அதுகுறித்து யாரும் எங்களுக்கு நெருக்கடிகளையும் அளிக்க முடியாது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை நீண்டகால தொலைநோக்குப்
பார்வையை கொண்டுள்ளது. உடனடி இலக்குகளை அடைவதற்கான அழுத்தத்திற்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது.
மக்களுக்கு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக செயல்பட்டு வருகிறோம். தேசிய நலன் தவிர வேறு எந்த கருத்தையும் அடிப்படையாகக் கொண்டு இந்தியா தனது நண்பர்களை ஒருபோதும் தேர்வு செய்ததில்லை.
நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தீவிரமாக உரையாடி வருகிறோம். அமெரிக்காவுடனும் பேசுகிறோம், ஆனால், நாங்கள் அவசரமாக ஒப்பந்தங்களைச் செய்வதில்லை.
காலக்கெடுவுடனோ அல்லது தலையில் துப்பாக்கி வைத்தோ ஒப்பந்தங்களை ஏற்படுத்துமாறு எங்களுக்கு யாரும் நெருக்கடி கொடுக்க முடியாது. இவ்வாறு பியூஷ் கோயல் பேசினார்.