வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 06.08.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 06.08.25


  அரூர் மு.மதிவாணனின் 'நினைவுகள்' என்ற சிறுகதையின் அருமை என்னைப்போன்ற வயதானவர்களுக்குதான் தெரியும். எனக்கு இப்போது வயது 72. பெயர்தான் 'சின்னஞ்சிறு' கோபு! முரளி மயில்சாமி என்ற இரண்டு பெரியவர்கள் அந்த கால நினைவுகளை பேசிக்கொண்டவிதம் என் மனதைக் கொள்ளைக்கொண்டது. பழைய நினைவுகளை அசைப்போடுவதில் உள்ள சுவாரஷ்யம் ஹரீஷ் போன்ற சிறுவர்களுக்கு தெரியாததில் வியப்பேதுமில்லை!


  ஜனனி அந்தோணி ராஜின் 'மாயமான மேகலா' என்ற சிறுகதையில் வெளிச்சத்திற்கு வராத அந்த பின்னனி நடிகையின் வருத்தம் மனதை வலிக்க செய்தது. இந்த உலகில் தங்களுடைய உழைப்பு மற்றவர்களின் பெரும் சம்பாத்தியத்திற்கும் புகழுக்கும் போய்விட, இவர்கள் யாருமறியாதவர்களாகவே இருப்பது நிச்சயம் வருத்தத்திற்குரியதுதான்.


  முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் எல்லா பத்திரிகைகளிலும் 'நெல்லை குரலோன், பொட்டல்புதூர்' என்ற பெயரில் பத்திரிகைகளில் நிறைய வாசகர் கடிதங்கள், கதை,கட்டுரைகள் போன்றவை வெளிவரும். அப்போது நானும் 'வடுகவிருட்சியூர் அமுதா' என்ற புனைப்பெயரில் பத்திரிகைகளில் நிறைய வாசகர் கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் நான் பொட்டல்புதூர் என்ற ஊரின் பெயரையே முதன் முதலாக கேள்விப்பட்டேன். இப்போது அந்த ஊரின் சிறப்பை ஆ.ராமகிருஷ்ணனின் கட்டுரையில் படித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.


  ரோட்டோரம் கடை போட்டு காய்கறி விற்பவளின் சோகக் கதைகளை காய்கறிகளை உதாரணமாகக்கொண்டே சொல்லியிருந்தவிதம் இதயத்தைத் தொட்டது. எஸ். சந்திரசேகரன் அமுதாவின் இந்த கவிதை வித்தியாசமாகவும் தனித்துவ அழகுடனும் சிறப்பாக இருந்தது.


  'தட்ஸ் ஆல்... மை டார்லிங்' என்ற தலைப்பில் முத்து ஆனந்த் எழுதியிருந்த ஐந்து கவிதைகளும் காதலின் அழகை ஒரு வானவில்லின் அழகுடன் மனதை ரசிக்க வைத்தது. அடுக்கடுக்கான உதாரணங்களுடன் இவர் எழுதும் காதல் கவிதைகள் ஒவ்வொன்றும் உள்ளத்தில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.


  நெல்லை குரலோனின் 'நல்ல நல்ல நட்பு பாப்பா!' என்ற கவிதை பிரமிக்க வைத்தது. நல்ல நட்புக்கு உதாரணம் சொல்லியிருந்தவிதம் சிறுவர்களின் மனதில் நிச்சயம் சிறப்பாக பதியும்.


  -சின்னஞ்சிறுகோபு,

   சிகாகோ.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%