தமிழ்நாடு இ.பேப்பர் பல லட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைவது மிக மகிழ்ச்சியை தருகிறது. தமிழ்நாடு இ.பேப்பரில் எனது பிறந்தநாள் வாழ்த்தை பார்த்து எனக்கு நிறைய நண்பர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் தமிழ்நாடு இ.பேப்பர் நிர்வாகத்திற்கும் எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தனது மகனோ மகளோ எதிர்காலத்தில் எந்த துறையில் முன்னுக்கு வருவார்கள், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வமும் திறமையும் இருக்கி என்று கவனித்து, ஊக்குவித்து உதவவேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். குமாரின் தந்தையின் தவறான கணிப்பினால் அவனால் விளையாட்டுத் துறைக்கும் போகமுடியாமல், கல்வியிலும் எதிர்பார்த்த அளவுக்கு வரமுடியாமல் ஒரு திண்டாட்டமான நிலைக்கு வந்துவிட்டான். முகில் தினகரனின் 'குமாரும் கிரிக்கெட்டும்' என்ற சிறுகதை பெற்றோர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய சிறுகதையாகும்.
கயப்பாக்கம் இரா.இரமேஷின் 'கோலவிழியாள்....!' என்ற சிறுகதை ரங்கோலி கோலம் போல என் மனதைக் கவர்ந்தது. நேர்த்தியான கோலம் போல இது ஒரு நேர்த்தியான சிறுகதை.
பயணங்கள் முடிவதில்லை பகுதியில் கா.ந.கல்யாணசுந்தரத்தின் 'அமெரிக்கா' என்ற கட்டுரை என் மனதைக் கவர்ந்தது. அமெரிக்காவில் இருந்துக்கொண்டே அமெரிக்காவை பற்றி படிப்பதில் ஒரு தனி மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. மவுண்ட் ரஷ்மோர் பற்றியும் அதில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களை பற்றியும், அது எப்படி, எவ்வளவு செலவில், எவ்வளவு காலத்தில் செதுக்கப்பட்டது போன்ற விபரங்களுடன் கட்டுரை சிறப்பாக இருந்தது.
ஈரோடு க.ரவீந்திரனின் 'ஆகஸ்ட் 15 சுதந்திர தினம்' என்ற கட்டுரை ஏகப்பட்ட தகவல்களுடன் அறிவுக்கு விருந்தாக இருந்தது. கோபால கிருஷ்ண கோகலே,
கர்தார் சிங், சுரேந்திரநாத் பானர்ஜி, மேடம் காமா, சூரியா சென், மதன் மோகன் மாளவியா, குதிராம் போஸ், சந்திர சேகர் ஆசாத், லாலா லஜபதி ராய், பகசிங், ராஜகுரு, சுகதேவ், வாஞ்சிநாதன் என்று 13 பேரைப் பற்றி சுருக்கமாகவும், அவர்களது தியாகம் மனதில் நிற்கும் விதத்திலும் தகவல்கள் இந்த கட்டுரையில் இருந்தது பாராட்டும்படி இருக்கிறது.
நமது நாட்டில் எல்லோரும் அறிந்த ஒரு மகத்தான தலைவர் சுபாஷ் சந்திர போஸ். அவரின் வீரமும், மர்மமும் நிறைந்த வாழ்க்கையை படிக்கும்போது, நமது சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை, பெருமையை சிறப்பை நன்கு உணரமுடிந்தது.
'கர்ப்பிணிப் பெண்கள் வேர்க்கடலையை சாப்பிடலாமா?' என்ற கேள்வியை எழுப்பி, கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமல்ல, அனைவருமே வேர்க்கடலை சாப்பிடலாம் என்பதை உணர்த்திய கட்டுரை, உடல் நலனுக்கு உகந்ததாக இருக்கிறது. இதைப்போன்ற கட்டுரைகள் தமிழ்நாடு இ.பேப்பரை பயன்மிகுந்ததாக ஆக்குகிறது.
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.