பணி நிரந்தரம் கோரி சென்னை மாநகராட்சி வளாகத்தில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த துப்புரவு பணியாளர்கள் நூற்றுக்கணக்கானவர்களை
அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக கூறி நீதிமன்ற உத்தரவுபடி கைது செய்து அப்புறப்படுத்தி இருக்கிறது அரசு.
ஒரு காலத்தில் தொழிற்சங்கங்கள் வைத்தது தான் சட்டமாக இருந்தது, அந்த நிலை இப்போது மாறி நிர்வாகம் பலம் பெற்று தொழிற்சங்கங்களை நசுக்கி வருகிறது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஒரு மாணவி ஆளுநரிடமிருந்து பட்டத்தை பெற மறுத்து துணைவேந்தர் கையில் இருந்து பட்டம் பெற்றிருக்கிறார்.
அதற்கு ஆளுநரின் கைகளால் பட்டம் வாங்க தான் விரும்பவில்லை என்றும், தான் திராவிட மாடல் அரசை ஆதரிப்பதாகவும்
தைரியத்துடன் கூறியிருக்கிறார். அவரது தைரியம் பாராட்டத்தக்கது.
தமிழக அரசு " தாயுமானவர் " என்ற திட்டப்படி 70 வயதை தாண்டிய குடும்ப உறுப்பினர்கள் உள்ள கார்டுகளுக்கு ரேஷன் பொருட்களை வீடு தேடி சென்று வழங்குகிறது.
இது மிகவும் பயனுள்ள செயல். இப்போது முதியவர்கள் மட்டுமே இருக்கும் வீடுகளில் உள்ள வயதானவர்கள் ரேஷன் கடைக்கு செல்ல ஆட்டோவை பயன்படுத்துகிறார்கள். அதற்கு கணிசமான ரூபாய்கள் செலவாகிறது.
மானிய விலையில் ரேஷன் பொருட்களை வாங்குவதால் கிடைக்கும் லாபம் ஆட்டோவுக்கு செலவாகி விடுகிறது.
எனவே இந்த திட்டம் மிக மிக வரவேற்புக்குரியது.
விழுப்புரம் மாவட்டத்தில் தரமற்ற தண்ணீரை பாட்டில்களில் நிரப்பி விற்ற பதினாறு தண்ணீர் தயாரிப்பு
நிறுவனங்கள் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது. தரமற்ற தண்ணீரை அருந்துவதால் நோய்கள் ஏற்படும். இது காசு கொடுத்து தண்ணீர் பாட்டில்கள் மூலம் நோயை வாங்கிய கதையாக இருக்கிறது
சென்னையில் ஏ.சி மின்சாரப் பேருந்து சேவை அரசின் சார்பில் தொடங்கப்பட்டிருக்கிறது.
இந்த புதிய மின்சார பேருந்துகளில் மக்களுக்கு அத்தியவசியமான ஏகப்பட்ட
வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
பொதுவாக அரசுப் பேருந்துகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை
என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.
புதிதாக பயன்பாட்டுக்கு விடப்பட்டிருக்கும் மின்சார பேருந்துகளையாவது முறையாக பராமரிக்குமாறு மக்கள் விரும்புகிறார்கள்.
ஒரு தடவை நான் என் சொந்த கிராமத்துக்கு அரசு டவுன் பஸ்ஸில் சென்றேன். அப்பொழுது பஸ்ஸில் உள்புறம் ஒரு இடத்தில் ஒரு சிறிய குட்டி சிலந்தி கூடு கட்டி இருந்தது.
ஒரு மாதம் கழித்து மீண்டும் அதே கிராமத்துக்கு அதே பேருந்தில் செல்ல நேர்ந்தது.
என்ன ஆச்சரியம் ! நான் ஒரு மாதத்திற்கு முன்பு பார்த்த அதே சிலந்தி வளர்ந்து பெரிதாகி அதே வலைக் கூட்டில் இருந்தது.
இது பேருந்துகளின் பராமரிப்பு தரத்தை உணர்த்துவதாக இருந்தது.
வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்