வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 22.07.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 22.07.25


  முகில் தினகரனின் 'எனக்கு நூறு கால்கள் இருக்கின்றன' என்ற சிறுகதை இல்லாமல் போனது வேறொரு விதத்தில் கிடைப்பதினால் ஏற்படும் ஆத்ம திருப்தியை மிக அழகாக சொல்லியது. " என்னோட ரெண்டு கால்களைத்தான் தொடமுடியாது...ஆனால் தினமும் கிட்டத்தட்ட நூறு கால்களை தொட்டுத் தொட்டு சந்தோஷப்பட்டுக்கறேன்... இதுல கிடைக்கிற ஆத்மதிருப்தி 700...800... பிச்சையெடுத்துச் சம்பாதிக்கிறதுல கிடைக்காது" என்று ஷுக்களுக்கு பாலீஷ் போடும் காலில்லாத சுயம்பு சொல்வது அவனது இதய ஏக்கத்தை ஒரு சோக காவியமாக உணர்த்தி, கண்களை கலங்க வைத்தது.


  சுமதி முருகனின் 'நம்மை ஏமாற்றத்திலிருந்து காக்கும்' என்ற சிறுகதை கல்வியின் முக்கியத்துவத்தை தெளிவாக உணர்த்தியது. படிக்காமல் ஒன்றும் தெரியாமல் இருந்தால் வாழ்க்கையில் ஏமாந்துதான் பரிதாபமாக நிற்கவேண்டும் என்ற படிப்பினையை தந்த இந்த சிறுகதை மிகச்சிறப்பு.


  நிரஞ்சனாவின் 'யாதுமாகி நின்றவள்' தொடர்கதை இந்த வாரம் மலரும் நினைவுகளாக அமைந்து, சிறுவர்களின் குதூகலத்தையும் பாசத்தையும் உணர்த்தியது.


  சுதந்திரப் போராட்ட வீரமங்கை கிட்டூர் ராணி சென்னம்மாவின் போராட்ட வரலாற்றை தினம் ஒரு தலைவர்கள் வரிசையில் அறிந்து, வியந்தேன். ராணி சென்னம்மாவுக்கு பெங்களூருவில் சிலை இருப்பதை நான் இப்போதுதான் அறிந்தேன் அதோடு இணையத்தில் கிட்டூர் சென்னம்மா திரைப்படம் கிடைக்கிறதாயென்றும் பார்க்க வேண்டும்.


  'நிலவு நாள்!' என்ற முனைவர் இராம. வேதநாயகத்தின் கவிதையை இப்போது நான் அமெரிக்காவிலிருந்து படிக்கும்போது ஒரு தனி மகிழ்ச்சி ஏற்படுகிறது. அமெரிக்காவின் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்தபோது நான் பள்ளிக்கூட மாணவனாக இருந்தாலும், அப்போது இலங்கை வானொலியில் நிலவில் மனிதன் இறங்கிய நிகழ்ச்சியை நேரிடையாக ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு ஒலிப்பரப்பிய நிகழ்ச்சியை ஆச்சரியத்துடன் கேட்டது நினைவுக்கு வருகிறது. அப்போதெல்லாம் பிற்காலத்தில் நானும் அமெரிக்காவுக்கு செல்வேன் என்று கனவிலும் நினைத்ததில்லை!


  பல்சுவை களஞ்சியத்தில் பாளை. கணபதியின் 'ஒரு நிமிடம் செவி கொடுங்கள்' என்ற தகவல் சிந்தனைக்கு விருந்தாக இருந்தது. வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை தெளிவாக புரிய வைத்தது.


  முத்து ஆனந்த்தின் புது தொடப்பம் வாங்கிய கதை ஒரே சிரிப்பு! அதை ஒரே ஜோக்காக வெளியிட்ட விதம் அதைவிட நல்ல ஜோக்!


  -சின்னஞ்சிறுகோபு,

   சிகாகோ.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%