வாசக சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைய நமது தமிழ்நாடு இ இதழில் :
திரு. குடந்தை. பரிபூ ரணன் அவர்களின் "இறந்த காலம்" சிறுகதை சிறிய நிகழ்வின் மூலம் அரிய கருத்தைப் பதிவு செய்துள்ளது அருமை. ஆசிரியர்களை மதிக்கும் நாடு ஆசீர்வதிக்கப் படுகிறது. கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு தான். நல்ல கருவில் நயமான கதை.
எறும்பூர்.திரு. செல்வகுமார் அவர்களின் விரிவான தொல்லியல் கட்டுரை அற்புதமான படைப்பு. 2600 ஆண்டுகளுக்கு முன்பாகவே கீழடி மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தார்கள் என்பதுவும், கி. மு. 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கீழடி நகர நாகரிகம் கிரேக்க, ரோம, சீன, சுமரிய நாகரீகங்களின் தொடர் நீட்சி என்பதுவும் எல்லோருமே அறியத்தக்க செய்திகள். இந்த தொல்லியல் மகத்துவங்களை வெளிக்கொணரப் பாடுபடும் தொல்லியல் துறை சான்றோரும், அரசும் பாராட்டுக்குரியவ ர்கள். மத்திய அரசும் மாச்சர்யங்கள் அற்று தமிழ் மக்களின் தகவினை தரணி உணர வகைசெய்ய வேண்டும். கட்டுரை ஆசிரியருக்கு தலை தாழ்ந்த வணக்கங்கள்.
3,4,5,6,7 விஷயங்களின் அருமையான தொகுப்பும் கவனம் பெறுகிறது.
திருமதி. தி. வள்ளி அவர்களின் சின்ன சின்ன கவிதைகள் நமது இ இதழில் வந்ததை மட்டுமே அறிந்து அவர்களைப் பாராட்டியுள்ளேன். ஒரு சாதாரண இல்லத்தரசி என்பது மட்டுமே என் மனதில் அவரது பிம்பம். ஆனால் "கொல கொலயா முந்திரிக்கா" நூல் விமரிசனம் படித்த பிறகு அவரது பிம்பம் வேறொரு பரிமாணம் பெற்று விட்டது. அவர் 150 சிறுகதைகளும், 4 நூல்களும் படைத்துள்ளார் என்று அறியும்போது அவர் எத்தகைய இலக்கிய ஆளுமை என்பது புரிந்தது. அவர் நம்மூர்க்காரர் என்பதில் எனக்குப் பெருமை. வாழ்த்துக்கள் மேடம்.
கவிதையிலும், கட்டுரையிலும் தனக்கென ஒரு ராஜபாட்டை அமைத்து வெற்றிநடை போடும் திரு. நெல்லை குரலோன் அவர்கள் சிறுகதை ஆசிரியராக (ஆனந்த பாஸ்கரில்) புது அவதாரம் எடுத்துள்ளது வரவேற்கத் தக்கது. ஏராளம் எதிர்பார்க்கிறோம் நல்ல நல்ல கதைகளை. தொடருங்கள் சார்.
திருமிகு படைப்பாளர்கள் முத்து லட்சுமி வ. தீபா, ஜானகி என புதியவர்கள் புதுக்கவிதை பக்கத்தில் நிலை பெற்றுள்ளனர். பிரமாதம். நிறைய எழுதுங்கள்.
TNPSC கேள்வித்தாளில் காணப்படும் மொழியாக்கத் தவறுக்கு திரு. அண்ணாமலை அவர்களின் சாட்டையடி போதாது. தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்றும், தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றும் சொல்லிச் சொல்லி வளர்ந்த சமூகம் தமிழ் சமூகம். முடி சூடுதலுக்கும், முடி வெட்டுதலுக்கும் வேறுபாடு தெரியாத மூடர்கள் TNPSC யில் இருக்கிறார்களா? வேதனை. வேதனை.
நண்பர்களே, ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வருகிறது. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர் திரு. ஆண்டி சுப்பிரமணியம். இவர் தனது பல்லாண்டுக்கால உழைப்பை அனுபவப் பின்னணியில் வைத்து "A Theatre Encyclopaedia" என்ற தலைப்பில் அவர் சேகரித்தது ஒரு பெரும் கலைக்களஞ்சியம். அது 60,000 உட் தலைப்புகளை கொண்ட அரிய வகைத் தொகுப்பு நூல். கையெழுத்துப் பிரதியாக இருந்த அந்த நூலை பாதுகாப்பதாகக் கூறி சென்னைப் பல்கலைக்கழகம் பெற்றுக்கொண்டது. பின்னர் அதைத் தவற விட்டுவிட்டது. பிரதி கிடைக்கவே இல்லை. யாரும் அது பற்றி கவலை கொள்ளவும் இல்லை. இதுதான் அறிவு சான்றோரின் நிலை. அதன் பிறகும் திரு. ஆண்டி அவர்கள் இன்னும் 20 ஆண்டுகள் முயற்சி செய்தால் மறுபடியும் அதைத் தொகுத்துவிடலாம் என்றாராம். அப்போது அவருக்கு வயது 80!!
கிரைம் கார்னர், தவிர மகளைத் தந்தையே சீரழித்தது, சேலைக்காக கணவனை கொலை செய்த மனைவி, ரூல்ஸ் பேசிய வங்கி ஊழியர் மீது துப்பாக்கித் தாக்குதல், மனைவி மற்றும் மாமியாரைக் கொலை செய்த கணவன் என்று 18 ஆம் பக்கம் முழுவதும் டெரர் செய்திகள் நிறைந்துள்ளன. காரணம் என்ன?
மக்கள் மனதில் ஆன்மிக உணர்வு அவிந்து போய் விட்டது. நாத்திகச் சேற்றில் அறிவுப் பாகலவன் அமிழ்ந்து விட்டான். இந்நிலை மாற வேண்டுமானால், இறையுணர்வு உதிக்க வேண்டும்.
அதற்கு ஒரு எளிய உபாயம் "வீடு தேடி வரும் தெய்வம்" இதழ் படித்து விழிப்புணர்வு பெறவேண்டும். நானும் உறவினர்கள் மத்தியில் தெய்வம் இதழின் பெருமைகளை அவசியத்தைப் பேசி வருகிறேன். முடியும் வரை முயல்வோம். சந்தாதாரரைக் கூட்டுவோம். அது தமிழ்நாடு இ இதழுக்கு நாம் ஆற்றும் நன்றிக்கடன். தெய்வம் இதழின் ஆங்கிலப் பதிப்பும் வெளிவர இருப்பது குறித்து மெத்த மகிழ்ச்சி. தமிழ்நாடு டாட் காம் குழுமத்தார்க்கு நன்றிகள் பல.
மீண்டும் நாளை சந்திப்போம்.
P. கணபதி
பாளையங்கோட்டை.