எனது இன்றைய கடிதத்தின் விசேஷம் - செய்திகள் அல்ல, நமது படைப்பாளர்களின் கவர்ச்சிகரமான படைப்புத் திறன் பற்றியே!
முதலில் திருமிகு.மீனா சேகர் அவர்களின் "நிலாவே வா" சிறுகதை. கதைமாந்தர்களின் காதல் வயப்பட்ட மனோநிலைகள் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. "கல்லதர் அற்றம் கடக்க யாவதும் வல்லுந கொல்லோ மடந்தை மெல்லடி" எனக் கேட்ட கோவலனை இந்தக் கதையின் அரவிந்த் நினைவூட்டுகிறான். அதுபோல் "நின் பிரிவினும் சுடுமோ இப் பெருங்காடு" எனக் கேட்ட முல்லைத்திணை தலைவியை சுவாதியும் நினைவூட்டுகிறாள். உண்மைக் காதலின் உயரிய சித்திரம். சபாஷ்!
சிவ. முத்து லட்சுமணன் அவர்களின் நமி நந்தியடிகள் நாயனார் வரலாறு மனிதருக்குள் பேதமில்லை எனும் கருத்தை முன்னிறுத்தும் பான்மை கவனம் ஈர்க்கிறது. இளைய சமுதாயத்தின் ஆன்மிக அஸ்திவாரத்திற்கு மற்றும் ஒரு கடைகல் கட்டுரை. வார்த்தை வளம் மிக்க அவரின் தமிழ் லாவகம் ஒரு தனி பாணியுடனான லாவணி. நாயனார்கள் பற்றி நல்லதையே வழங்கும் நாயகருக்கு நன்றிகள்.
"தோல்வி வந்தால் அதை மிதித்துச் செல்.
சோகம் வந்தால் அதை உடைத்துப் போடு. உயர்வு உன்னிடம் ஓடோடி வரும்" என்ற உற்சாக வரிகளில் தாமரைத் தமிழ் நிலவு அவர்கள் "உயர்வு" என்ற தன் கவிதையில் பீனிக்ஸ் பறவையின் தத்துவத்தை ஒலிக்கச் செய்துள்ளார். அருமையான டானிக் கவிதை.
வரைமுறைச் சட்டகங்களுக்குள் வெண்பா கவிதைகளைப் பொதிந்து வழங்குவது முன்னைவர். வேதநாயகம் அவர்கள் பெரு விருப்பம். மாறாக "தத்துவ வித்தகனே" என்று கணபதி கவிதையை சரளமான தளத்தில் செதுக்கியுள்ளார். எதுகையும், மோனையும், இணைந்த பக்திக் கீர்த்தனையாக மிளிர்கிறது இந்தப் படைப்பு. மிக நன்று சார்.
திரு. ஆறுமுக நாகப்பன் அவர்களின் அன்னைக்கான அஞ்சலிக் கவிதை தாயை இழந்த மகன்கள் அனைவரின் ஆன்மாவின் எதிரொலியே அன்றி வேறல்ல. " மனம் ஆறாது துடிக்கின்றேன், ஆறுதல் தேடித் தவிக்கின்றேன்" என்ற சொற்கள் துயரத்தின் துளிகள். என் கண்ணிலும் நீர் துளிர்த்தது. A significant emotional elegy. பாசத்தின் பரிதவிப்பு கொடுமைதான் சார்.
"சங்கல்பம் எடுப்போம், சாதிப்போம்" என்று சொல்லும் கவிதையில் வழக்கம்போல் "நேர்மறை சிந்தனைக்கு நான் இங்கே" என்று நவில்கிறார் திரு. நெல்லை குரலோன் அவர்கள். ரஷ்ய - உக்ரைன் போரை நிறுத்தும் வல்லமை யாருக்கும் இல்லையோ என்பதில் அவரது ஆதங்கம் தெரிகிறது. பண்புக்கும், அன்புக்கும் அடையாள தேசம் பாரதம் என்பதில் ஒரு பெருமிதமும், ஓருலகம், ஒரே தேசம் அமைய வேண்டும் என்ற உத்வேகமும் ஒளிர்கிறது. கருத்துச் செறிவும், கவிதை நடையும் களிநடம் புரியும் கற்கண்டுப் படைப்பு. பாராட்டுக்கள்.
இவை தவிர அற்புதமான படைப்புகள் ஏராளம் மிகுந்துள்ளன. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாக சிலவற்றை மட்டும் சுட்டியுள்ளேன். விரித்துச் சொல்ல இடமில்லை. மற்றபடி எல்லாமே அல்வா சுவைதான்.
இத்தனைப் படையலையும் பந்தி வைத்த தமிழ்நாடு இ இதழ் குழுமத்தார்க்கு நன்றிகள் பல.
மீண்டும் நாளை சந்திப்போம்.
P. கணபதி
பாளையங்கோட்டை.