முரளி கல் சிற்பத்தை செதுக்கி கொண்டே இன்னும் இரண்டு நாளில் இதை முடித்து விட வேண்டும். தன்னுடைய ஆசிரியர் வந்து பார்த்துவிட்டு என்ன சொல்வாரோ? என்று மனதில் ஒரு பதட்டம் நிலவியது. தான் வடித்த சிலையின் முகத்தை பார்த்தான். ஆறுமுகம் கொண்ட ஆறுமுகனை பார்த்து சற்று ஆறுதல் அடைந்தான் .ஹூ ம்....! மூன்று வருடத்திற்கு முன்பு அவனுடைய மனம் சென்றது. மகாபலிபுரம் சிற்பக் கல்லூரியில் அவன் ஆசையுடன் சேர்ந்தான். சிலை வடிப்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு வருடம் தான் கல்லூரி முடித்தான் . விதி விளையாடியது. அவனுடைய தந்தையார் விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். எனவே ,அவனால் தொடர்ந்து கல்லூரியில் பயில முடியவில்லை. குடும்ப சூழ்நிலையால் சொந்த ஊருக்கே வந்து விட்டான். குடும்பத்தை பாதுகாக்கும் பொறுப்பு வந்ததால் கூலி வேலைக்கு சென்று விட்டான் .ஆனாலும் எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்குமோ அப்பொழுதெல்லாம் கழனியில் இருக்கும் கல்லைக் கொண்டு வந்து உளியால் செதுக்குவான் .ஆனால் சிலை உடைந்து விடும். ஐந்து முறை அழகான முருகன் சிலை வடிக்க முற்பட்டு தோற்று விட்டான் .ஒரு சமயம் வெளியூருக்கு செல்லும்போது அவனது ஆசிரியரை பஸ்ஸில் பார்த்தான். ஆசிரியரும் முரளியை பார்த்து எப்படி இருக்கிறாய்? என்ன செய்கிறாய் ?என்று விசாரித்தார் . அவன் தன்னைப் பற்றியும், தன்னுடைய வேலையை பற்றியும் கூறினான் .சிற்பம் வடிக்க ஆசை ஆனால் முடியவில்லை தோற்றுக்கொண்டே இருக்கிறேன் என்றான். ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்றால் பல இடையூறுகள் கட்டாயம் இருக்கும் விடாமுயற்சியுடன் நீ செயல்பட்டால் ஒரு நாள் நிச்சயம் வெற்றி கிடைக்கும், என வாழ்த்தி விட்டு அவனுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். எப்பொழுது வேண்டுமானாலும் நீ என்னிடம் தொடர்பு கொண்டு, உன்னுடைய சந்தேகங்களை கேட்கலாம் .நான் முடிந்தவரை உனக்கு உதவி செய்கிறேன் என்றார் ஆசிரியர். இரண்டு மாதங்கள் கழித்து நான் உங்கள் ஊருக்கே வந்து உன்னை பார்க்கிறேன் நீ அதற்குள் முருகன் சிலையை முடித்துவிடு என்று கூறிவிட்டு விடை பெற்றார் .தன்னுடைய அயராது உழைப்பினாலும், தொழில் பக்தியாலும், அழகான முருகன் சிலையை ஆறாவது முறையாக செதுக்கி உள்ளான் முரளி. ஆசிரியரும் நேரில் வந்து பார்த்து அழகில் மயங்கி , அகமகிழ்ந்து போனார். கல்லூரியில் முழுவதுமாக படித்து முடித்த மாணவர்களை விட நீ தத்ரூபமாக சிலையை வடித்திருக்கிறாய்
என பாராட்டினார். "வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி "பட்டம் பெற்றார் போல் அவனது மனம் மகிழ்ச்சியில் பொங்கிது.

எம்.எல்.பிரபா,
ஆதம்பாக்கம்.