ஸ்டாலினின் ஆட்சியில் ரூ.129 கோடி வருவாய் ஈட்டி தமிழக சுற்றுலாத்துறை சாதனை

ஸ்டாலினின் ஆட்சியில் ரூ.129 கோடி வருவாய் ஈட்டி தமிழக சுற்றுலாத்துறை சாதனை

சென்னை, ஆக.16–


ஸ்டாலினின் ஆட்சியில் இந்தியாவில் தமிழகம் முன்னணி சுற்றுலா மாநிலமாக திகழ்கிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–


தமிழ்நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 2022–ல் 0.14 மில்லியன்; 2023–ல் இது 1.17 மில்லியனாக அதிகரித்துள்ளது. அதேபோல, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 2022–ல் 218.58 மில்லியன் என்பது, 2023–ல் 286 மில்லியனாக அதிகரித்துள்ளது. இந்தப்புள்ளி விவரங்கள் எல்லாம் மக்கள் இடையே சுற்றுலா குறித்து வளர்ந்துள்ள ஆர்வத்தைப் புலப்படுத்துகின்றன.


இந்திய நாட்டிய விழா கொண்டாட்டத்தைக் காண ஒவ்வொரு ஆண்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகிறார்கள். இத்துடன், திருவிடந்தையில் சர்வதேச பலூன் திருவிழா, சர்வதேச காத்தாடி திருவிழா முதலிய விழாக்களும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.


4000 கிலோ மீட்டர் நீள ரெயில் பாதை வசதிகள், சாலை வசதிகள், சென்னை தூத்துக்குடி, எண்ணூர், நாகை ஆகிய முக்கிய துறைமுகங்கள், 17 சிறு துறைமுகங்கள் விரைவான விமானப் போக்குவரத்துக்கு உதவும் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய சர்வதேச விமான நிலையங்கள், சேலம், தூத்துக்குடி முதலிய உள்நாட்டு விமான நிலையங்கள் ஆகியவை சுற்றுலாத் துறை வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிகின்றன.


2021–ல் ஆட்சிப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு கருணாநிதியைப் போல அரும் தொண்டாற்றி வருகிறார்.


5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் கீழடி, சிவகளை முதலான இடங்களில் மேற் கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் கிடைக்கப்பெற்ற உலகில் முதன்முதலாக 5300 ஆண்டு களுக்கு முன்பே இரும்பின் பயன்பாட்டைக் கண்டறிந்தவன் தமிழன் என்பதை மெய்ப்பிக்கும் தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறுகளைக் காட்சிப்படுத்திடும் கீழடி அருங்காட்சியம் அமைத்துள்ளார்.


தமிழனின் பண்பாட்டுப் பெருமையைப் பாருக்கு உரைக்கும் வீர விளையாட்டாகிய ஜல்லிக்கட்டின் முத்திரைச்சின்னமாக மதுரை அலங்காநல்லூர் அருகே பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கத்தை உருவாக்கியுள்ளார். குமரிமுனையில் கருணாநிதி நிறுவிய 133 அடி உயரமுடைய பிரம்மாண்டமான அய்யன் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைத்து 37 கோடி ரூபாய் செலவில் கடலலைகள் நடுவிலே இந்தியாவிலேயே முதன்முதலாக கண்ணாடி இழைக் கடல்பாலத்தைக் கட்டியுள்ளார்.


குமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலையில் ரூ.11.98 கோடி மதிப்பீட்டில், 3டி லேசர் தொழில்நுட்ப ஒளிக்கற்றை வீச்சுகள் பரவச் செய்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தை ரூ.80 கோடி செலவில் புதுப்பித்து இங்குள்ள ஒற்றைக் கல் தேர்மீதும் லேசர் தொழில்நுட்பக் கதிர்வீச்சினைப் பாய்ச்சிப் பார்ப்பவர் உள்ளங்களைப் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளார்.


கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடற்கரை, திற்பரப்பு அருவி பகுதிகள் 7.15 கோடி ஒதுக்கீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன. பூம்புகார் சிற்பக் கலைக்கூடத்தை ரூ.23.60 கோடி ஒதுக்கீட்டில் புதுப்பிக்கும் பணிகளில் 85 சதவீதம் முடிவடைந்து இதர பணிகள் நடைபெறுகின்றன. குற்றாலம் அருவிப் பகுதியில் ரூ.11.35 கோடியில் சுற்றுலா வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.


விருதுகள்


தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சிக்கும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பல்வேறு வசதிகளுக்கும் உரிய திட்டங்களை நிறைவேற்றிவரும் முதலமைச்சரின் திராவிட மாடல் அரசு பல்வேறு சுற்றுலா விருதுகளை வென்று புகழ் படைத்து வருகிறது.


ஜப்பானின் ஒசாகாவில் நடைபெற்ற ஜப்பான் சுற்றுலா எக்ஸ்போ விருது இந்தியாவின் சிறந்த பாரம்பரியத் தலத்திற்கான வெள்ளி விருது, தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம் கோயில்களுக்காக தமிழ்நாடு சுற்றுலாத்துறை பெற்ற விருது, பெர்லின் மாநகரில் 6.3.2024 அன்று நடைபெற்ற விழாவில் பசிபிக் பகுதி சுற்றுலா எழுத்தாளர் சங்கத்தால் தமிழ்நாடு கலாச்சார தலத்திற்கு வழங்கப்பட்ட சர்வதேசப் பயண விருதுகள் என எண்ணற்ற விருதுகளைப் பெற்று இந்தியாவின் மிகச் சிறந்த சுற்றுலாத் துறை என திராவிட மாடல் அரசின் சுற்றுலாத் துறை புகழ்வடிவில் ஒளிர்கிறது.


முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதற்கு ஏற்ற இடமாக தமிழ்நாட்டை உயர்த்திடவும், சுற்றுலாப் பயணிகளின் தங்கும் காலத்தை அதிகரித்திடவும், அந்நியச் செலாவணியை ஈர்க்கும் வகையிலும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கேற்ற வசதிகளையும், கட்டமைப்புகளையும் அதிகப்படுத்திடும் வகையிலும் தமிழ்நாட்டு வரலாற்றில் முதல்முறையாக, தமிழ்நாடு அரசின் சுற்றுலாக் கொள்கை - 2023 யை உருவாக்கி 26.9.2023 அன்று வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதிலும் பல சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


அதிக வருவாய்


தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கடந்த ஆண்டுகளை விட 2024–ம் ஆண்டில் ரூ.28.69 கோடி அதிக வருவாய் ஈட்டி மாபெரும் சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்பெறும் 26 ஓட்டல்கள் மூலமாகவும், அனைத்து சுற்றுலாக்களையும் ஆன்லைனில் பதிவு செய்யும் சேவைகள் காரணமாகவும் 2021 மே முதல் 2025 ஜனவரி வரை ரூ.129.28 கோடி வருவாய் ஈட்டி மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது.


இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%