"ஏமாற்றாதே... ஏமாற்றாதே?"

"ஏமாற்றாதே... ஏமாற்றாதே?"


  "டேய் கணேசா... ராஜமன்னார் அய்யா... நம்ம பெரிய பிள்ளையார் கோவில்ல குடும்பத்தோட வெயிட் பண்ணிட்டிருக்கார்.... 108 தேங்காய் உடைக்கிறதா வேண்டுதலாம்!... அதனால... உடனே 108 தேங்காய்களை டெம்போவில் ஏற்றியனுப்பு" தன் முதலாளி கத்தலாய்ச் சொல்ல.


  "சரிங்க முதலாளி... உடனே அனுப்பிடறேன்" என்றான் கணேசன்.


  டெம்போவில் தேங்காய்களை எண்ணி ஏற்றும் பொழுது 107 தேங்காய்கள் ஏற்றிய பின் கணேசன் நிறுத்திக் கொள்ள, பக்கத்தில் நின்றிருந்த பத்ரி, "கணேசண்ணே... நானும் எண்ணிட்டுத்தான் இருக்கேன்... 107 தான் போட்டிருக்கீங்க!" என்றான்.


மெல்லக் கண்ணடித்த கணேசன், "அது எனக்கும் தெரியும்.... தெரிஞ்சுதான் ஒண்ணைக் கொறைச்சேன்!" 


  "ஏண்ணே?" பத்ரி கேட்க.


  "வீட்டுக்கு எடுத்திட்டுப் போறேன்டா"


  "அய்யய்ய... இது தப்பண்ணே!... தெய்வகுத்தம்"


   "டேய் .... கோயில்ல டெம்போவிலிருந்து தேங்காய்களை இறக்கும் போது அங்கு யாரும் எண்ணப் போறதில்லை... அதே மாதிரி கல்லாய் உட்கார்ந்திருக்கிற பிள்ளையாரும் கவுண்ட் பண்ணப் போறதில்லை... வீணா சாமிக்கு உடைக்கிறதை என் வீட்டுக்குச் சமையலுக்கு உடைச்சா என்னடா தப்பு?" கணேசன் சொல்ல.


அமைதியானான் பத்ரி.


  "சரி நான் கிளம்புறேன்" சொல்லியபடியே அந்த ஒற்றைத் தேங்காயை எடுத்து, தன் பைக்கின் பெட்ரோல் டேங்க் மீதிருந்த லெதர் பேக்கினுள் திணித்தான் கணேசன்.


  "அண்ணே போற வழியில என்னையும் இறக்கி விட்டுடுங்கண்ணே" பத்ரி கெஞ்சலாய்க் கேட்க.


  "சரி... வா... வா!" என்றான் கணேசன்.


   மண்பாதையைக் கடந்து தார் ரோட்டை தொட்டதும் அந்த பைக்கின் வேகம் மேலும் அதிகரித்தது.


சாலையில் போக்குவரத்து சற்றுக் குறைவாய் இருக்க, ஆக்ஸிலேட்டரை இன்னும் அதிகமாகி முறுக்கினான் கணேசன். வண்டி பிசாசு வேகத்தில் பறந்தது.


சாலையின் நடுவிலிருந்த ஒரு ஸ்பீடு பிரேக்கரை கடைசி வினாடியில் கண்டு விட்ட கணேசன் வேகத்தை குறைக்க முற்படும் முன் பைக் அந்த ஸ்பீடு பிரேக்கர் மீது ஏறியது.


அந்த அதிர்வில் பெட்ரோல் டேங்க் கவரினுள்ளிருந்த தேங்காய் தெறித்து வெளியே வர, அதை ஒரு கையால் பற்றி விடும் எண்ணத்தில், தன் வலது கையை ஹேண்டில் பாரிலிருந்து கணேசன் விடுவிக்க


அந்த நேரம் பார்த்து எதிரே ஒரு லாரி வந்து விட தடுமாறினான் கணேசன்.


 பைக்கைக் கட்டுப்படுத்தும் அவன் முயற்சி வீணாகிட, ஸ்பீடு பிரேக்கர் மீது ஏறிய பைக் அந்தரத்தில் பறந்து சாலையோரம் குட்டிக்கரணமடித்து விழுந்தது.


ஒற்றைத் தேங்காய் மட்டும் தெறித்து போய் சாலையோரமிருந்த அரச மரத்தடி பிள்ளையார் கோவிலின் பீடத்தின் மீது விழுந்து உடைய,


 அதனுள்ளிருந்த தண்ணீர் மொத்தமும் பக்கத்திலிருந்து பிள்ளையார் சிலை மீது அபிஷேகம் போல் விழுந்து சிதற,


சில நிமிடங்களுக்குப் பின் மெல்லச் சுதாரித்துக் கண் விழித்து எழுந்த பத்ரி பக்கத்தில் கிடந்த கணேசனை உசுப்பினான்.


அவன் மூச்சற்றுக் கிடந்தான்.


(முற்றும்)



முகில் தினகரன் 

கோயம்புத்தூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%