திருநெல்வேலி: எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கொண்டுவந்தவர்கள் மீது நம்பகத்தன்மை இல்லை என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி கல்வித் துறை சார்பில் 3 நாள் கலைப் போட்டிகள் தொடங்கியது. இதில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் கொள்கிறார்கள். இதில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு கலையரசன் மற்றும் கலையரசி பட்டங்களும் வழங்கப்பட உள்ளது.
பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் இந்த போட்டிகளை தொடங்கி வைத்த தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: ”மத்திய அரசு ஒவ்வொரு புதிய திட்டத்தை தொடங்கும்போதும் தேனை தடவியது போல் இனிப்பாக பேசிவிட்டு இப்போது நிதியை தர மறுகின்றனர். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு, மாநில அரசிற்கான சரி பங்காக நிதியை வழங்கி வந்தது. ஆனால் இப்போது படிப்படியாக அதை குறைத்து விட்டது.
பி.எம். ஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வந்து விட்டு மீண்டும் நிதியை நிறுத்தினால் நாம் என்ன செய்ய முடியும்? குலக் கல்வியை ஊக்குவிக்கும் புதிய கல்வி திட்டத்தை எதிர்க்கிறோம். வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அதைக் கொண்டு வந்த நபர் மீது தான் நம்பகத்தன்மை இல்லை. தவறு செய்யத்தான் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதனால்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
தவறு செய்த மத்திய அரசே வெற்றி பெறுகிறது. மக்கள் நலத் திட்டங்களை செய்த மாநில அரசு வெற்றி பெறாமலா இருக்கும்? நாங்கள் கண்டிப்பாக வெற்றிபெறுவோம். ஓபிஎஸ் கூட அதனை தெளிவாக சொல்லி உள்ளார். ஒவ்வொருவருக்கும் ஒரு பழக்கம் உள்ளது. விஜய்க்கு என ஒரு பழக்கம் உள்ளது. அவர் எப்போது எழ வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும், எப்போது நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என ஒரு திட்டமிடலோடு நிகழ்ச்சியை நடத்துகிறார். அதன்படி நேற்று நடந்துள்ளார்.
மோடியின் செல்லப்பிள்ளை அதானி. எல்ஐசி மட்டுமல்ல, அவர் எதை கேட்டாலும் அவருக்கு தாரைவார்த்து கொடுக்க மத்திய அரசு மோடியும் தயாராக இருக்கிறார்கள். பாமக சட்டப் பேரவை உறுப்பினர்கள் 3 பேருக்கு அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்ட பிரச்சினைகளில் நான் கறாராக கொண்டதன் காரணமாக, என்னை கல் குவாரியின் காட்பாதர் என அன்புமணி விமர்சித்திருக்கலாம். அதிகமாக கல் குவாரிகள் இருக்கும் தொகுதி எனது தொகுதிதான். ஆனால் ஒரு கல் குவாரி கூட எனது பேரிலோ, எனது குடும்பத்தினர் பெயரிலோ இல்லை” என்று அப்பாவு தெரிவித்தார்.