
அவனுக்கு முப்பது வயதிருக்கும். அழுக்கான உடை, பரட்டைத் தலை, இடுங்கிய கண்கள், நெஞ்செலும்பு தெரியும் பட்டனில்லா சட்டை.
ஆனால், சாலையோரம் தரையில் அவன் வரையும் ஓவியங்களுக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. அவன் தீட்டும் ஒவ்வொரு ஓவியமும் பார்ப்போரை ஈர்க்கும். கடந்து செல்வோரின் கண்களை கடத்தி வரும்.
பழமையையும், புதுமையையும் கலந்து ஒருவிதமாக அவன் தீட்டும் ஓவியம் யோசிக்க வைக்கும்.
அந்த இடத்திலிருந்து மூன்று கட்டிடங்கள் தள்ளி ஒரு பெரிய கட்டிடத்தின் மொட்டை மாடியில் டென்ஷனாய் நின்றிருந்தான் கௌதம்.
"மிஸ்டர் கௌதம்... நீங்க என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ... இன்னிக்கு ஈவினிங் என் டேபிளுக்கு நாம புதுசா தயாரிக்கப் போற "லிக்யூட் சோப்"பிற்கான விளம்பர ஓவியம் வந்தாகணும்"
மூளையைக் கசக்கிப் பிழிந்து எத்தனையோ படங்களை வரைந்த கௌதமிற்கு எதுவுமே முழு திருப்தி தரவில்லை.
சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தவன் கண்களில் தூரத்தில் அந்த அழுக்கு ஓவியன் தரையில் வரைந்த படம் தெரிய, அவன் முகம் பிரகாசமானது.
"வாவ்... வாட் எ ஃபண்டாஸ்டிக் கிரியேட்டிவிட்டி"
தரையில் அவன் வரைந்திருந்த ஓவியத்தில் ஒரு அழுக்குப் பெண் மேகத்தை வெளுத்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் நின்றிருந்தார் மறுபுறம் திரும்பிய ஏதோவொரு கடவுள்.
சட்டென்று தன் மொபைலை எடுத்து ஜூம் செய்து அந்த ஓவியத்தை படம் பிடித்த கௌதம், தன் மேஜைக்குச் சென்று மொபைலிலிருந்த ஓவியத்தை தனது பாணியில் வரைந்தான்.
"அற்புதம்... அற்புதம்" தன்னைத்தானே பாராட்டிக் கொண்டான்.
மாலை அலுவலகத்திற்கு வந்த எம்.டி.அந்த ஓவியத்தைப் பார்த்து அசந்து போனார். கௌதமை அழைத்து அலுவலக ஊழியர்கள் முன் அபரிமிதமாய்ப் பாராட்டியவர், "இந்த மாதத்திலிருந்து உனக்கு பத்தாயிரம் ரூபாய் இன்கிரிமெண்ட்" எல்லோரும் கை தட்டி கௌதமை உற்சாகப்படுத்தினர்.
அதே நேரம், 'சட..சட'வென அடித்த மழையில் அந்த தெரு ஓவியன் வரைந்த ஓவியம் மொத்தமும் கரைந்து ஓட, அவசர அவசரமாய் அதன் மீது விழுந்திருந்த சில்லறைகளைப் பொறுக்கினான் அந்த அழுக்கு ஓவியன்.
(முற்றும்)
முகில் தினகரன்
கோயமுத்தூர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?