தன் மனைவியின் பெற்றோர் வசிக்கும் சிவகிரி கிராமத்தில் நடைபெறும் திருவிழாவிற்காக மனைவி கங்காவையும், மகன் விஷாலையும், அழைத்துக் கொண்டு நான்கு நாட்கள் முன்னதாகவே வந்திருந்தார் சுகுமார்.
வந்த இரண்டாம் நாள் வழக்கம் போல் கங்காவிற்கு நெஞ்சு சளி கட்டிக் கொள்ள மூச்சு விடவும் முடியாமல், ஓங்கி இருமவும் முடியாமல் தவித்தாள் அவள்.
"அத்தை இப்படித்தான் மூன்று மாசத்துக்கு ஒரு தடவை இவளுக்கு இப்படி நெஞ்சு சளி கட்டிக்கும்... அப்ப ஒரு வேலை செய்வேன்.. அவ்வளவுதான் பத்தே நிமிஷத்தில் நார்மல் ஆயிடுவா" என்றார் சுகுமார் தெ மாமியாரிடம்.
"அது என்ன?ன்னு சொல்லுங்க மாப்பிள்ளை.. உடனே பண்ணிடுவோம்" கங்காவின் தாய் சொல்ல.
ஒரு சிறிய தயக்கத்திற்குப் பின் "வந்து "சுர்"ருன்னு ஆட்டுக்கால் சூப் வெச்சு ஒரு டம்ளர் குடிச்சாப் போதும் எல்லாம் சரியாயிடும்! என்றார் சுகுமார்.
பொங்கி எழுந்தாள் மாமியார். "என்ன... என்ன பேசுறீங்க மாப்பிள்ளை?... திருவிழாவுக்காக காப்புக் கட்டிய நாளிலிருந்து இந்த ஊர்ல எந்த வீட்டிலும் அசைவம் சமைச்சதில்லை... சமைக்கவும் கூடாது!... அது ஊர்க் கட்டுப்பாடு!... மீறினால் தெய்வகுத்தம் ஆயிடும்!... திருவிழாவே நடக்காது... விபரீதமாயிடும்"
"ஓ... அப்படியா?... சரி... சரி... நான் போய் ஒரு இருமல் டானிக் வாங்கிட்டு வர்றேன்" சொல்லி விட்டு வெளியேறிய சுகுமார் பஸ் பிடித்து பக்கத்து ஊருக்குச் சென்று ரகசியமாய் ஆட்டுக்கால் சூப் வாங்கி வந்தார்.
நேரே தன் மாமியாரிடம் அதைக் கொடுத்து "இதை அவளோட கட்டிலுக்கு அருகில் வெச்சிடுங்க... இருமல் வரும் போதெல்லாம் எடுத்து ஒரு மடக்கு குடிக்கச் சொல்லுங்க... இருமல் சரியாயிடும்!... இதப் பாருங்க நீங்க அதை திறக்கவும் வேண்டாம்.. கங்காவுக்கு ஊட்டவும் வேண்டாம்!... அவளே எந்திரிச்சுக் குடிச்சுக்குவா".
"சரிங்க மாப்ள"
மறுநாள் காலை சந்தோசமாய் கண் விழித்தாள் கங்கா. அவள் நெஞ்சை அடைத்துக் கொண்டிருந்த சளி காணாமலே போனது.
அறையை விட்டு வெளியே வந்த கங்காவைப் பார்த்து வீட்டிலுள்ள அனைவருமே "அப்பாடா" என்று நிம்மதியாயினர்.
உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார் சுகுமார்.
மூன்று தினங்களுக்குப் பிறகு, ஊர்த் திருவிழாவெல்லாம் நல்ல விதமாக முடிந்ததும் மனைவி குழந்தையோடு தன் ஊருக்கு புறப்பட்ட சுகுமார், போகிற போக்கில் தன் மாமியாரை அழைத்து, "என்னமோ கோவில்ல திருவிழா சாட்டி இருக்கு... அசைவம் சாப்பிட்டா தெய்வகுத்தம் ஆயிடும்... விபரீதமாயிடும்...ன்னு சொன்னிங்க ஒண்ணுமே ஆகலை பார்த்தீங்களா?" என்றார்.
"அதான் நாம அசைவம் எதையுமே செய்யலையே!". அப்பாவியாய் சொன்னாள் மாமியார்.
"அப்படின்னு நீங்க நினைச்சிட்டிருக்கீங்க... கங்காவுக்கு நான் வாங்கிட்டு வந்து கொடுத்தது டானிக் அல்ல... ஆட்டுக்கால் சூப்பு" என்று சொல்லி விட்டு வெற்றிப் புன்னகையோடு சுகுமார் தன் மனைவி மகனோடு வெளியேற.
"அப்படியே...அதே சந்தோசத்துல ஊருக்குப் போங்க மாப்ள... நீங்க கொடுத்தது ஆட்டுக்கால் சூப்புன்னு எனக்கு தெரியும்... அதனாலதான் அதைக் கீழே கொட்டிட்டு கங்காவுக்கு நான் மிளகுக் கஷாயத்தைக் கொடுத்தேன் என்கிற உண்மை என்னோடவே இருக்கட்டும்!" என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் கங்காவின் தாய்.
முற்றும்.
முகில் தினகரன்.
கோயம்புத்தூர்.