1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைப்போம்- தமிழக அரசு தடுக்க முடியாது இந்து முன்னணி தலைவர் ஆவேசம்
Jul 31 2025
125

திண்டுக்கல், ஆக.1-
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும். இதனை தமிழக அரசு தடுக்க முடியாது" என இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்து முன்னணி சார்பில், 'மாற்றம் தந்த முருக பக்தர்கள் மாநாடு’ என்ற தலைப்பிலான கூட்டம் திண்டுக்கல்லில் நடந்ததுங இதில், அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது-
மதுரையில் நடைபெற்ற முருக பக்தர் மாநாடு, இந்துக்களிடையே மாபெரும் ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்களுக்காக வாதாடுவதற்கும், போராடுவதற்கும் தொடங்கப்பட்டது தான் இந்து முன்னணி அமைப்பு. தற்போது இந்த அமைப்பு, அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
திண்டுக்கல் மலைக்கோட்டையிலுள்ள அபிராமி அம்மன் கோயிலில் பல நூறு ஆண்டுகளாக விக்ரகங்கள் இல்லை. இந்த கோயிலில் விக்ரகங்களை பிரதிஷ்டை செய்து, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் குடமுழுக்கு நடத்த வேண்டும். திண்டுக்கல்லில் அபிராமி அம்மன் பக்தர்கள் மாநாட்டை நடத்த திட்டமிட்டு வருகிறோம். இந்த மாநாட்டிற்கு அனைத்து அரசியல் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
விநாயகர் சிலைகள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 15 லட்சம் வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு, அதை விட அதிகமாக விநாயகர் சிலைகள் வைக்கப்படும். இதனை தமிழக அரசு தடுக்க முடியாது. இந்து முன்னணி அரசியல் கட்சி அல்ல. ஆனால், இந்துக்களுக்காக குரல் கொடுக்கும் கட்சிகளுக்கு தேர்தலில் ஆதரவு அளிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?