சென்னை, அக்.24–
27–ந் தேதி (திங்கட்கிழமை) வங்கக்கடலில் புதிய புயல் உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘மோன்தா’ என பெயரிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:–
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இது, அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து, மேலும் வலுவடையக் கூடும். அக் 27ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு ‘மோன்தா’ என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த பெயரை தாய்லாந்து நாடு பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்., 29 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிப்புரம், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர் ஆகிய 6 மாவட்டங்களில் நாளை (26–ந் தேதி) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
27ம் தேதி மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை
அதேபோல், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 28ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2வது காற்றழுத்த தாழ்வு
இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் 2வது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு (சென்டி மீட்டரில்) பின்வருமாறு:–
பள்ளிப்பட்டு – 15 செ.மீ., நாலுமுக்கு – 12 செ.மீ., ஊத்து – 11 செ.மீ., அரக்கோணம் – 10 செ.மீ.,பாலமோர், பேச்சிபாறை, மேடவாக்கம் – 9 செ.மீ., காக்காச்சி – 8 செ.மீ, திருவாலாங்காடு, சித்தார், பேச்சிபாறை, பெருஞ்சாணி அணை, புதான் அணை, திருத்தணி – 7 செ.மீ., மின்னல், திருச்சி டவுன், திற்பரப்பு, திருவள்ளூர் – 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.