ஆந்திராவில் பஸ்சில் பயங்கர தீ; 25 பயணிகள் பரிதாப பலி: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
கர்னூல், அக். 25–
ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் இன்று அதிகாலை பஸ் தீப்பற்றிய சம்பவத்தில் பயணிகள் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திரா மாநிலம் கர்னூலில் பயணிகள் 42 பேருடன் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் தீப்பற்றியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த இந்த பஸ் ஆந்திர மாநிலம் கர்னூலில் பைக் மீது நேருக்கு நேர் மோதி தீப்பற்றியது என விசாரணையில் தெரியவந்தது. இந்த தீ விபத்தில் பஸ்சில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அனைவரும் சிக்கிக்கொண்டனர். தீ மளமளவென பஸ்சின் அனைத்து பகுதிகளுக்கும் பரவிய நிலையில் பயணிகள் அலறியடித்துக்கொண்டு பஸ்சில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்றனர். இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் சிக்கி 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 12 பேர் காயங்களின்றி உயிர் தப்பினர். ஆனாலும், எஞ்சிய பயணிகளில் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் பலருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்ன தேகூர் கிராமத்திற்கு அருகே நடந்த பஸ் தீ விபத்து குறித்து அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன்.
காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் வழங்குவார்கள்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ஜனாதிபதி இரங்கல்
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில், ''ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் பஸ்சில் தீப்பற்றியதில் உயிர் இழப்புகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்'' என குறிப்பிட்டு உள்ளார்.
பிரதமர் மோடி
தலா ரூ.2 லட்சம் உதவி
தனது வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:–
ஆந்திரப் பிரதேசம் கர்னூல் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இறந்த ஒவ்வொருவரின் நெருங்கிய உறவினர்களுக்கும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.