புதுடெல்லி: இன்று நடைபெற்ற வேலைவாய்ப்புத் திருவிழாவில் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், புதிதாக சேர்ந்துள்ள இளம் பணியாளர்கள் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தை வழி நடத்துவார்கள் என்று குறிப்பிட்டார்.
ரோஜ்கர் மேலா எனும் வேலைவாய்ப்புத் திருவிழா இன்று நடைபெற்றது. இதில், 51,000க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்த ஆண்டின் தீபாவளி, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புத்தொளியை கொண்டுவந்துள்ளது. இந்த திருவிழா கொண்டாட்டங்களுக்கு இடையே நிரந்தர வேலைக்கான நியமன ஆணைகளைப் பெறுவது திருவிழாவின் உற்சாகத்தோடு வேலைவாய்ப்பின் வெற்றியையும் கொண்ட இரட்டை சந்தோஷமாகும்.
இந்த மகிழ்ச்சி இன்று நாடு முழுவதும் 51 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களை சென்றடைந்துள்ளது. அவர்களின் குடும்பங்களுக்கு இது மட்டற்ற மகிழ்ச்சியை கொண்டுவந்திருக்கும். நியமன உத்தரவுகளைப் பெற்ற அனைவருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகள். வாழ்க்கையின் புதிய தொடக்கத்திற்காக அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்றைய பணிநியமனங்கள் வெறும் அரசு வேலைகள் மட்டுமல்ல, தேசக்கட்டுமானத்துக்கு பங்களிக்கும் மிகச்சிறந்த வாய்ப்புமாகும். பணிநியமனங்களைப் பெற்றிருப்போர் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. புதிய நியமனதாரர்கள், மக்களே தெய்வம் என்ற மந்திரத்தை மறந்துவிடக் கூடாது. சேவை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை பின்பற்றி பணியாற்ற வேண்டும்.
வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் இந்திய இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் சக்திவாய்ந்த தளமாக உள்ளது. அண்மைக் காலங்களில் இத்தகைய திருவிழாக்கள் மூலம் 11 லட்சத்துக்கும் அதிகமான பணிநியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசு வேலைகள் மட்டுமின்றி 3.5 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இலக்குடன் பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியா வேலைவாய்ப்புத் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. தேசிய பணி சேவை போன்ற தளங்களின் மூலம் புதிய வாய்ப்புகளுடன் இளைஞர்கள் இணைக்கப்படுகின்றனர். இவற்றில் 7 கோடிக்கும் அதிகமான பணியிடங்கள் பற்றிய தகவல்கள் இளைஞர்களுக்கு பகிரப்பட்டுள்ளன.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வில் இறுதிப் பட்டியலில் இடம் பெற்று ஆனால் தேர்வு பெறாத இளைஞர்களுக்கு பிரதிபா சேது போர்ட்டல் வாய்ப்புகளை வழங்குகிறது. இவர்களின் முயற்சி வீணாகாமல் திறமையுள்ள இளைஞர்கள் தனியார் மற்றும் பொது நிறுவனங்களில் இந்த போர்ட்டல் மூலம் பணியில் சேர்கிறார்கள். இளைஞர்களின் திறனை உரிய முறையில் பயன்படுத்துவது இந்தியாவின் இளையோர் ஆற்றலை உலகுக்கு வெளிப்படுத்தும்.
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி தொடர்ச்சியான முயற்சிகள் தேவை. இவர்களைப் போன்ற இளம் பணியாளர்கள் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு தலைமை தாங்குவார்கள். இவர்களின் முயற்சிகள் மூலம் இந்தியாவின் எதிர்காலம் புதுவடிவம் பெறும். நாட்டு மக்களின் கனவுகள் நனவாகும்" என தெரிவித்தார்.