7500 புத்தகங்களுடன் ‘வித்தியா கணபதி’ * 250 கிலோ அத்திப்பழ விநாயகர் விநாயகர் சதுர்த்தி விழா: தமிழகம் முழுவதும் இன்று கோலாகல கொண்டாட்டம்
சென்னை, ஆக. 27–
விநாயகர் சதுர்த்தி விழா இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது.
இந்து மதத்தில் முழுமுதற் கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமான், ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தில் அவதரித்ததாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இந்நாளையே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். அவ்வகையில் இன்று விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படு கிறது. இதையொட்டி கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் குடும்பம் குடும்பாக சென்று விநாயகரை தரிசனம் செய்தனர். இதனால் கோவில்களில் வழக்கத்தைவிட இன்று கூட்டம் அதிகாக காணப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். வீடுகளில் விநாயகர் வழிபாடு மேற்கொள்ளும் மக்கள், விநாயகர் சிலைகளை வைத்து அலங்கரித்து, விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், லட்டு, அப்பம், அவல், பொரி, கடலை, சுண்டல் போன்ற நைவேத்யங்களை படைத்து பூஜை செய்தனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் மற்றும் பூஜைப்பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. குறிப்பாக, வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.
விதவிதமான
விநாயகர் சிலைகள்
இதேபோல் கோவில்கள் சார்பிலும், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஷ்வ இந்து பரிசத், சிவசேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் பிரமாண்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், விதவிதமான பொருட்களைக் கொண்டு, விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகளை செய்து பிரமிக்க வைத்துள்ளனர். அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் தரிசனம் செய்து வருகின்றனர்.
மணலி புதுநகர் பகுதியில் 7500 புத்தகத்தில் ‘‘வித்யா கணபதி சிலை’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகர் சிலையில் 5000 பகவத் கீதை, 1500 வேல்ய விருத்தம், 1000 முருகர் ஸ்லோகன் புத்தகங்கள் இடம் பெற்றன. 35 அடி உயரமும், 25 அடி அகலமும் உடைய இந்த சிலை அனைவரையும் கவர்ந்தது. சென்னை கொளத்தூர் ரெட்ஹில்ஸ் சாலையில், வெள்ள எருக்கஞ்செடி வேரின் கட்டையை அரை அடியாக வைத்து சுமார் 14 ஆயிரத்திற்கு மேற்பட்ட மரக்கட்டையில் 41 அடி உயரம் 28 அடி அகலத்தில் விநாயகர் சிலை அமைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேற்கு மாம்பலத்தில் 250 கிலோ அத்திப்பழ விநாயகர் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னை ஜி கே எம் காலனி கென்னடி தெருவில் 5001 சிறிய முருகர் சிலைகளை வைத்து 20 அடி உயரத்தில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
42 அடி உயரத்தில் சுமார் 3 ஆயிரம் பித்தளை விளக்குகள், சங்குகளுடன் கூடிய பிரம்மாண்ட விநாயகர், 500 மஞ்சள் கிழங்குகளை பயன்படுத்தி 30 அடியில் உருவாக்கப்பட்டுள்ள சயன விநாயகர், 5,001 பிஸ்கட் பாக்கெட்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், பிரம்மாண்ட லட்டு விநாயகர், கதாயுதத்துடன் கூடிய விநாயகர் சிலை மற்றும் அருகம்புல் விநாயகர், மயில்தோகை விநாயகர், ஐந்து முக விநாயகர், தேங்காய் விநாயகர் என விதவிதமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளுக்கு அந்தந்த பகுதியில் உள்ள பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
பிள்ளையார் பட்டியில்
சிறப்பு வழிபாடு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உலக புகழ்பெற்ற பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. குடவரை கோவிலான இங்கு விநாயகப்பெருமான் மற்ற இடங்களில் காணப்படுவதைப்போல நான்கு கைகளுடன் இல்லாமல் இரு கைகளுடன் காணப்படுகிறார். விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு அலங்காரமும் தீப ஆராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது .அதன் தொடர்ச்சியாக தங்க மூஷிஷ வாகனத்தில் நாதஸ்வரம் முழங்க விநாயகப் பெருமானும், வெள்ளி பல்லக்கில்அங்குச தேவரும், சிவனின் அஸ்திரதேவரும் புறப்பாடாகி கோவில் எதிரே உள்ள திருக்குளப்படித்துறையில் எழுந்தருளினர். அங்கு காலை 10 மணிக்கு பஞ்சாங்க முறைப்படி 11 வகையான திரவியங்களுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
மலைக்கோட்டையில்
150 கிலோ கொழுக்கட்டை
திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோ எடையில் பிரம்மாண்ட கொழுக்கட்டை மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் உள்ள உச்சிப் பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகர் கோயிலில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா விமா்சையாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி இன்று காலை உச்சிப்பிள்ளையார் மூலவர், மாணிக்க விநாயகர் மூலவர் சந்நிதிகளில், முறையே 75 கிலோ வீதம் மொத்தம் 150 கிலோ எடையில் பிரம்மாண்ட கொழுக்கட்டை படைக்கப்பட்டது.
இதே போல் தமிழகம் முழுவதும் உள்ள விநாயகர் கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.