SIR | தமிழக வாக்காளர்களிடம் நவ.4 முதல் டிச.4 வரை வீடு வீடாக ஆய்வு - தேர்தல் ஆணையம் தகவல்

SIR | தமிழக வாக்காளர்களிடம் நவ.4 முதல் டிச.4 வரை வீடு வீடாக ஆய்வு - தேர்தல் ஆணையம் தகவல்



புதுடெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, குஜராத், மத்தியப் பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) இன்று முதல் தொடங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பிர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பிஹாரைத் தொடர்ந்து அடுத்து வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். செய்தியாளர்களிடம் பேசிய ஞானேஷ் குமார், "இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கோவா, சத்தீஸ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.


இதற்கான அச்சிடுதல் மற்றும் பயிற்சி நாளை (அக்.28) தொடங்கி நவ.3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை வீடு வீடாகச் சென்று ஆயுவு செய்து கணக்கெடுக்கும் பணி நடைபெறும். வரைவு வாக்காளர் பட்டியல்கள் டிசம்பர் 8-ம் தேதி வெளியிடப்படும். டிசம்பர் 9 முதல் ஜனவரி 8, 2026 வரை ஆட்சேபனைகள் மற்றும் உரிமைகோரல்களை தெரிவிக்கலாம். அவை ஏற்றுக்கொள்ளப்படும். நோட்டீஸ் வழங்கப்பட்டவர்களுக்கான விசாரணைகள் ஜனவரி 31 வரை தொடரும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7-ம் தேதி வெளியிடப்படும்.


சட்டப்படி ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பு அல்லது தேவைக்கு ஏற்ப வாக்காளர் பட்டியல்கள் திருத்தப்பட வேண்டும். ஏற்கெனவே 1951 முதல் 2004 வரை 8 முறை வாக்காளர் பட்டியல்கள் திருத்தப்பட்டுள்ளன. கடைசி சிறப்பு தீவிர திருத்தம் 21 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. அதாவது, 2002 முதல் 2004 வரை நடைபெற்றது.


அடிக்கடி நிகழும் இடப்பெயர்வு காரணமாக வாக்காளர் பட்டியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக வாக்காளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர்களை பதிவு செய்திருக்கலாம். மேலும், இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது, வெளிநாட்டினரின் பெயர்களை நீக்குவது, தவறாக சேர்க்கப்பட்டவர்களின் பெயர்களை நீக்குவது போன்ற காரணங்களாலும் சிறப்பு தீவிர திருத்தம் அவசியமாகிறது" என்று அவர் தெரிவித்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%