tamilnadu epaper

அடிக்கடி மின்தடையா? உடனே சரி செய்யுங்கள் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

அடிக்கடி மின்தடையா?  உடனே சரி செய்யுங்கள்  அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு


சென்னை, மே 7

 அடிக்கடி மின்தடை ஏற்படும் பகுதிகளை சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்து, மின் தடைக்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை சரி செய்ய வேண்டும் என, மின்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.


சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்விநியோகம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மின்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்தது. மின்வாரியத்தின் செயல்பாடுகளை நவீனமயமாக்கும் வகையில், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக இணையப் பக்கம், வழங்குநர் இணைய முகப்பு, மனிதவள மேலாண்மை அமைப்பு ஆகிய 3 புதிய இணையதள சேவைகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். 

  மின்வாரியத்தின் புதிய திட்டங்கள் மற்றும் சிறப்புத் திட்டங்கள், அவற்றின் தற்போதைய நிலை மற்றும் செயலாக்கம் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். இதில் அமைச்சர் பேசியதாவது:

அனைத்து அனல் மற்றும் புனல் மின்னுற்பத்தி நிலையங்களிலும் முறையான பராமரிப்பை மேற்கொண்டு, முழுத் திறனில் இயங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். நடைபெற்று வரும் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி, அவற்றை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மின்தடை

கோடை வெயில் மற்றும் மழை காரணமாக மின்விநியோகக் கட்டமைப்புகளான மின் மாற்றிகள், புதைவடக் கம்பிகள், மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் போன்றவற்றில் பழுதுகள் ஏற்பட்டு மின்தடை ஏற்பட்டால், அவற்றை உடனடியாகச் சரி செய்யத் தேவையான பணியாளர்களுடன் அனைத்துப் பொறியாளர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அடிக்கடி மின்தடை ஏற்படும் பகுதிகளை சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்து, மின் தடைக்கான மூல காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை சரி செய்ய வேண்டும்.

முன்கூட்டிதகவல்

திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படும்போது, அதுகுறித்த விவரங்களையும், மின்சாரம் தடைபடும் நேரம் குறித்தும் முன்கூட்டியே குறுஞ்செய்தி மூலம் நுகர்வோருக்குத் தெரிவிக்க வேண்டும். 

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன், அனைத்து மேலாண்மை இயக்குநர்கள், இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.