மானாமதுரையில் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் 45-வது ஆராதனை விழாவில் கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்தினர்.
கர்நாடக இசைக் கலைஞர்களின் குருவாக போற்றப்படும் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில், கரூர் மாவட்டம் நெரூர், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா, உத்தரபிரதேச மாநிலம் காசி, பாகிஸ்தானின் கராச்சி ஆகிய 5 இடங்களில் ஜீவசமாதி அடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஆண்டுதோறும் 2 நாட்கள் மானாமதுரையில் ஆராதனை விழா நடைபெறும். அதன்படி நேற்றுமுன்தினம் தனியார் மண்டபத்தில் ஆராதனை விழா தொடங்கியது. சதாசிவ பிரம்மேந்திராள் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
தொடர்ந்து கர்நாடக இசைக் கலைஞர்களின் வாய்பாட்டு, வயலின் உள்ளிட்ட பல்வேறு இசைக் கச்சேரிகள் நடைபெற்றன. நேற்று காலை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் உஞ்சவ்விருத்தி, குரு அஞ்சலி-கோஷ்டி கானம், கன்யா பூஜை, தம்பதி பூஜை, இசைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனைக் குழுவினர் செய்தனர்.