tamilnadu epaper

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஞானசேகரன் மனு தாக்கல்

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஞானசேகரன் மனு தாக்கல்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் அந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீஸார் கடந்த டிசம்பரில் கைது செய்தனர். இந்த வழக்கில் ஞானசேகரனுக்கு எதிராக போலீஸார் சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதையடுத்து இந்த வழக்கு அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.


இந்நிலையில் மகளிர் நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால், இந்த வழக்கு விசாரணைக்காக ஞானசேகரன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொறுப்பு நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஞானசேகரன் தரப்பில், இந்த வழக்கில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தவறானது என்றும், ஆதாரமற்றவை என்பதால் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் எனவும் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.


அதையடுத்து நீதிபதி இந்த வழக்கு விசாரணையை வரும் ஏப்.7-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். அன்றைய தினம் மகளிர் நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வரவுள்ளது.