புதுடெல்லி, ஏப். 8–
சமையல் காஸ் விலை, சிலிண்டருக்கு, 50 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.இன்றுமுதல் இது அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் தற்போது ரூ.818.50 ஆக விற்கப்படும் சிலிண்டர் ரூ.5௦ உயர்ந்து 868.50 அதிகரிக்கும்.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, டெல்லியில் நேற்று கூறியதாவது:
சமையல் காஸ் விலை சிலிண்டருக்கு, 50 ரூபாய் உயர்த்தப்படுகிறது. உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு, 500 ரூபாயில் இருந்து, 550 ரூபாயாக உயர்கிறது. பொது பிரிவினருக்கு, 803 ரூபாயில் இருந்து 853 ரூபாயாக அதிகரிக்கிறது. இந்த விலை, உள்ளூர் வரி நிலவரத்துக்கு ஏற்ப மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.
சமையல் காஸ் சிலிண்டர் விலை தொடர்பாக, 15 – 30 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படும். சமையல் காஸ் சிலிண்டரில், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள, 43,000 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஈடு செய்யும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு தலா, 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இது விற்பனை விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாது. சர்வதேச அளவில் உள்ள தற்போதுள்ள சூழ்நிலை நீடித்தால், பெட்ரோல், டீசல் விலையை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்படும். 8ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்தியில் பா.ஜ. ஆட்சிக்கு வந்த போது சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.410.50. பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு 2019ல் சிலிண்டர் விலை ரூ.701.50 ஆக அதிகரித்தது. தற்போது ரூ.868 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.