பீஜிங், ஏப். 8–
சீனாவில் 'முதலை கடவுள்' என்று அழைக்கப்படுகிற, மோஜுன்ராங் நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் திவாலாகி விட்டது. இதன் காரணமாக ,இந்த நிறுவனத்துக்கு சொந்தமான மொத்தமாக 100 டன் எடையுள்ள முதலைகள் உயிருள்ள நிலையில், அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த முதலைகளை ஏலம் விடும் நடவடிக்கையில் ஷென்சென் நான்ஷன் மக்கள் கோர்ட் இறங்கியுள்ளது. இந்த முதலைகளுக்கான ஆரம்ப விலை 4 மில்லியன் யென் (அதாவது சுமார் ரூ. 4.72 கோடி) ஆகும். மார்ச் 10ம் தேதி ஏலம் தொடங்கியுள்ளது. மே 9ம் தேதி முடிவுக்கு வரும்.
சீனாவில், இறைச்சிக்கு மட்டுமின்றி, முதலையின் தோலுக்கும் அதிக மதிப்புள்ளன.அத்துடன், டானிக்குகள், அழகுசாதனப் பொருட்கள், ஒயின் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்களின் தயாரிப்பில் முதலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், முதலைகள் அதிக லாபம் ஈட்டும் இனங்களாக சீனாவில் கருதப்படுகின்றன.
2003ம் ஆண்டு முதல் வணிக ரீதியாக வளர்க்கப்படுகிற, வர்த்தகம் செய்யக்கூடிய சீனாவின் காட்டு விலங்குகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சியாமி முதலைகள், அங்கு மிகவும் பிரபலம் ஆகும். இவை ஒவ்வொன்றும் 200 முதல் 500 கிலோ வரை எடை இருக்கும்.
முதலைகளை ஏலம் எடுப்போர், அவற்றை எடுத்துச்செல்வதற்கான செலவுகளை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏல விளம்பரத்தை ஆன்லைனில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.