tamilnadu epaper

அன்னையின் நினைவுகளுடன் அன்னிய தேசத்தில் ஒருஇரவு

அன்னையின் நினைவுகளுடன் அன்னிய தேசத்தில் ஒருஇரவு


பால் நிலவு காட்டி பாலமுதூட்டி சேலையில் வாய் துடைத்து


சீலையில் 

தூளி கட்டி 

காலை வரை

தாலாட்டி ஆராட்டி


உறங்க வைத்த 

உந்தன்

முந்தானையை முகர்ந்தபடி


படுத்துறங்கிய இரவுகள் 

எல்லாம் 

என்


ஆழ்மனக்கப்பலின் 

அடித்தட்டில் அலுங்காமல் 

ஆடிக் 

கொண்டிருக்கின்றன!


பேணிவளர்த்த 

மகன் 

தாங்கிடுவான்

என்றே

நீ வளர்த்தாய்!


வறுமையிலும் 

உயர்கல்வி

படிக்க வைத்தாய் !


மற்றோர் முன்

சிறக்க வைத்தாய்!


உயர்ந்த நிலையில் 

இருக்க வைத்தாய்!


வசதிகளின் 

வாசஸ்தலத்தில் 

வாத்சல்யத்திற்கு 

இடமில்லாமல் போயிற்று!


பொருளிருந்தால் வாழலாம் 

நலமாக 

என்றெண்ணி பொருளீட்ட 

வந்தாயிற்று!


ஒரு கோடி மைல் 

தொலைவில் ஓரிடத்திற்கு!


நம் வாழ்வில் 

பாசமும் பந்தமும் 


இரு கோடிகளுக்கு பிரிந்ததென்ன?


அன்று இரவெல்லாம் 

கண் விழித்து


என்னை தூங்க வைத்தாய்!


இன்று 

உன் நினைவுடனே தவிக்கும்படி ஏங்கவைத்தாய்!


ஒருவருகொருவர் மென்னுணர்வுகளுடன் அன்று 

பேசிமகிழ்ந்த நாம்


அவரவர் வீட்டில்

அன்றாடம்  

மின்னுருவங்களுடன்

பேசி மகிழ்கிறோம் இன்று!


உறவுகளில்லாமல் 

இரவுகள் 

தொடரலாம்!


உணர்வுகள் இல்லாமல்

இதயங்கள் 

உறங்குமா?


கணினிதிரையில் 

காணும் 

அம்மாவிற்கு 

கால் பிடிக்க முடியுமா?


கண் கலங்கும் நிலையில் 

தோள்சாய 

முடியுமா?


புரிந்துக்கொண்டு

தலை சாய்கிறேன் வெற்றுப் புன்னகையுடன்!


இது 

இன்றைய நாகரீக சமுதாயம்!


உணர்வுகளை 

மென்று தின்று  

உறவுகளின்றி 

ஊமையாய்

தவிக்கும் 

நவீன சமுதாயமென்று!


-ரேணுகாசுந்தரம்