tamilnadu epaper

அன்புச் சட்டையில் சிதறிய பொத்தான்கள்

அன்புச் சட்டையில் சிதறிய பொத்தான்கள்


        தேகத்திற்கு வலிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் மென்மையாக உடலை வருடியது காலைக் காற்று.


      மண்டப நுழைவு வாயிலில் வாழைமரங்கள் கட்டப்பட்டு சுற்றப் பட்டிருந்த தோரணங்கள் அந்த இடத்தையே பூஞ்சோலையாக மாற்றிக் காட்டியது.


      உறவினர்கள் வருகையால் அந்த இடமே உற்சாகமாக இருந்தது. பழைய கதைகளைப் பேசிக்கொண்டிருந்த பாட்டிகளுக்கு இடைவெளியே இல்லாமல் பேச இன்னும் பல நூறு கதைகள் இருந்தன.


       அண்ணி,பாட்டி, தாத்தா, சித்தப்பா, சித்தி என உறவுப் பெயர்கள் அழைக்க ஆளின்றித் தடுமாற,

உறவுகளின் சங்கமத்தால் இங்கே அத்தனை உறவுகளும்

 உற்சாகமாய் உலா வந்தன.


     சொந்த ஊருக்குப் போவதென்றால் இந்த வயதிலும் தன்னை அறியாமல் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும் ராஜாவிற்கு. மகனுக்குத் திருமணம் செய்யும் வயதான போதும் தன் சொந்த ஊருக்கு வரும்போது பழைய நினைவுகளில் தன்னுடைய இளமைக்கால வயதே நினைவுகளில் இருக்கும்.

 

      சொந்த மண்ணின் வாசம், சொந்தம் பேசும் உறவினர் கூட்டம், நட்புகளின் சந்திப்பு என உற்சாகத்திற்குப் பல காரணங்கள் இருக்கும். சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சி வசப்படுவதும் , கற்பனைகளில் மகிழ்வதும் பிடிக்கும். ஊருக்கு வரும் உற்சாகத்திற்கு இதுவும் காரணம். 


   எந்த விதமான உணர்ச்சிகளோ சொந்த பந்தத்தினுடைய ஈர்ப்போ இல்லாது

சுற்றுலா போவது போல சுற்றுவதற்கு மட்டுமே கூட வரும் மனைவியை நினைத்தால் எரிச்சல் தான் வரும் அவனுக்கு. எப்படி இவளால் எப்படி இருக்க முடிகிறது? 

தன் சுகம் , தன் தேவை என எல்லா நேரமும் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்க எப்படி முடிகிறது? என்ற ஆச்சரியம் இவனுக்குள் என்றைக்கும் இருக்கும். கேட்க முடியாது. கேட்டால் சண்டை வரும். உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொள்வான். ஆரம்பத்தில் வலியாக இருந்தது. இப்பொழுது பழகிப்போனது.


     ராஜா காரை நிழல் பார்த்து நிறுத்திவிட்டு விசேஷம் நடக்கும் மண்டபத்தை அடைந்தான்.


       அண்ணனின் அறுபதாம் கல்யாணம் நிகழ்வு க்காகத் தான் சொந்த ஊருக்கு வந்திருந்தான். நாளை விசேஷம்.

கையில் அண்ணனுக்கும் அண்ணிக்கும் வாங்கிய உடைகள் இருந்தன.


       வாயிலை நெருங்க நெருங்க அவனுக்குள் உற்சாகம் வந்தது. அண்ணனுக்கு இந்த உடை பிடிக்குமா? அண்ணி என்ன சொல்வாரோ? என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டே உள்ளே நுழைந்து அறையில் தன் பொருட்களை எல்லாம் வைத்துவிட்டு வேறு உடைமாற்றி வெளியே வந்தான்.

மனைவி உடை கூட மாற்றாமல் வந்த வேகத்திலேயே ஏசியை ஆன் பண்ணிவிட்டுத் தூங்க ஆரம்பித்தாள்.

இவனுக்கு எரிச்சலாக இருந்தது. வந்த இடத்தில் ஏதாவது உதவி தேவைப்படுமா என்றெல்லாம் கூட யோசிக்காமல் எப்படி இவளால் இப்படித் தூங்க முடிகிறது? 

கேட்டால் அந்த இடத்தைப் போர்க்களமாக மாற்றி விடுவாள்.

வழக்கம்போல வலியை மறைத்துக் கொண்டு மற்ற வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தான்.


   அண்ணன் வர, வாங்கண்ணே! 

உட்காருங்க என்றவுடன் அண்ணன் அமர்ந்தார். 

என்னப்பா பயணமெல்லாம் சௌகரியமா இருந்ததா?

என்று இயல்பாகக் கேட்க....

தலையை ஆட்டினான்

      பழைய கதைகளைப் பேசப் பேச உற்சாகமும், விவாதமுமென கலவையான உணர்வலைகள் சந்தித்து மீண்டன.


       தனக்குத் தன்னுடைய நண்பன் வாங்கிக் கொடுத்த உடையை அண்ணன் காட்ட தான் அண்ணிக்கும் அண்ணனுக்கும் எடுத்துக் கொண்டு வந்திருந்த உடையையும் காட்டினான். அண்ணன் பேசுவதைப் பார்த்தால் நண்பன் எடுத்துக் கொடுத்த உடையையே நாளை அணிவார் போலத் தோன்றியது.


     சரிடா! நீ இரு நான் வேலைகளைக் கவனித்து விட்டு வருகிறேன் என்று அண்ணன் எழுந்து சென்றார். 


     பல எண்ணங்களைச் சுமந்தவன் நாளை ஒரு வேளை தான் எடுத்துக் கொடுத்த உடையை அணியவில்லை என்றால் சண்டை எதுவுமின்றி அப்படியே எடுத்துச் சென்று விட வேண்டும் என்று மனதில் உறுதி கொண்டான்.


     மறுநாள் காலை விடியல் இளம் மஞ்சளும் சிவப்புமாக இனிதே விடிந்தது. ஹோமத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர்.

கோயிலில் இறைவனுக்குப் பல அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்காரம் நிறைவுற்றது.


    

       சிறு பலகை இடப்பட்டு அண்ணியும் அண்ணனும் அமர்ந்தனர். உடன்பிறப்புகள், மகன் ,உறவுகள் என சல்லடை பிடித்துத் தண்ணீர் விட வந்தனர்.


     முடிந்த பிறகு தான் எடுத்துக் கொடுத்த சட்டையை அணிவார் என்று எண்ணியவன் நண்பன் கொடுத்த சட்டையை அணிந்த அண்ணனைப் பார்த்தவுடன் அவனையும் அறியாமல் ஆதங்கம் எழுந்தது.


  ஏண்ணே! நான் வாங்கின சட்டையைப் போடல என்று கேட்க அண்ணன் இதைப் போட்டுட்டேன். நேற்று நான் சொன்னேடா என்று கேட்டார்.

கோபத்தில் இவனுக்கு வார்த்தை சற்றே தடிக்க அந்த இடம் சற்று நேரத்தில் உற்சாகத்தை இழந்தது. 


    சிறிது நேரம் காரசாரமான விவாதத்திற்குப் பிறகு நண்பன் வாங்கிக் கொடுத்த சட்டையைக் கழற்றி விட்டு இவன் வாங்கிக் கொடுத்த சட்டையை அணிந்து கொண்டார் அண்ணன்.


     என்னதான் சட்டையை அணிந்து கொண்டாலும் இருவருக்குமே ஒரு இடைவெளி உண்டானதென்னவோ உண்மை. எவ்வளவு திட்டமிட்டாலும் இது போன்ற ஏதோ ஒரு அசௌகரியம் எல்லா விழாக்களிலும் நடந்து விடுகிறது. ஒரு வழியாக மறுபடியும் சகஜ நிலைமைக்கு வர வந்திருந்த அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. 


      சாப்பிடுவதற்கு மனமின்றி தோட்டத்துப் பக்கம் வந்து அமர்ந்தான். மனைவி மட்டும் சரியாக அமைந்திருந்தால் இந்த இடத்தில் தன்னை எப்படி வழிப்படுத்தி இருப்பாள் என்று எண்ணிப் பார்த்தான். தன்னைப் புரிந்து கொண்டு உயர்விலும் தாழ்விலும் கை கொடுத்து ,துவளும் போது தோள் கொடுக்கும் மனைவி அமைந்திருந்தால் , நீங்கள் அண்ணனிடம் ஆசையாக எடுத்து வந்ததை மெதுவாகச் சொல்லி சட்டையைப் போடச் சொல்லி இருக்கலாமே! கோடை வெயிலின் தாக்கத்திலும் அண்ணனின் விசேஷத்திற்காக அலைந்து திரிந்து ஆசையாக எடுத்து வந்தது அவசர வார்த்தைகளால் பலனின்றிப் போயிற்றே! என்று எடுத்துச் சொல்லி இருப்பாள். பொது இடத்தில் நாகரிகம் இல்லாமல் இவள் நடந்து கொள்வதும் அதனால் தான் பாதிக்கப்பட்டு இவள் எப்படி நடந்து கொள்வாளோ? என்று இந்த விசேஷம் முடியும் வரை இதைப்பற்றியே கவலை கொண்டு இப்படி வழி மாறுவதை நினைத்து வருந்தினான்.

   

        எதுவாக இருந்தாலும் அண்ணன் நட்புக்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பார் என்று தெரிந்தும் தன் அன்பைப் புரியவைக்க முடியாதபடி ஆத்திரம் கண்ணை மறைத்து விட்டதே என்று வருந்தினான். 


        தான் வாங்கிக் கொடுத்த சட்டையை அண்ணன் போட்டுக் கொண்டால்தான் அன்பா? தனக்கும் அண்ணனுக்குமான உறவை ஒரு சட்டை விலக்கிக் காட்டுமா?

என்று எண்ணியவனாக எழுந்தான். புதிதாக வாங்கிய சட்டையில் பொத்தான்கள் உதிர்ந்தது போல தன்னுடைய வார்த்தைகள் உதிர்ந்து போனதை எண்ணினான்.


   அதே நேரம் அண்ணனும் தம்பி தனக்காக எடுத்து வந்திருக்கிறானே என்று எண்ணி அவன் எடுத்துக் கொடுத்த சட்டையைப் போட்டுக் கொண்டார்.


        தான் எடுத்துக்கொடுத்த சட்டையைப் போட்டுக் கொண்டு அண்ணன் மற்றவர்களுக்கு ஆசீர்வாதம் செய்வதைக் கண்டதும் எதுவும் புரியாமல் தானும் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டான். 

அவசரம் எந்த நேரத்திலும் அன்பைக் கொச்சைப்படுத்தக்கூடாது என்று உறுதி எடுத்தான்.


     விட்டுக் கொடுக்கும் போது அன்பு பலமாகிறது. உதிர்ந்து விழுந்த பொத்தான்களால் சட்டையின் அழகு கெடுவது போல உதிர்ந்து போன வார்த்தைகளால் அன்பு கொச்சைப்படுத்தப்படுகிறதோ?


இருவருமே இதை உணர்ந்தனர். புரிதல் வந்துவிட்டால் எந்த உறவிலும் விரிசலுக்கு வாய்ப்பில்லை. புரிந்தது சற்றுத் தாமதமாக.



-தமிழ்நிலா