கேசம் அலையென பறக்க
வேகம் எடுத்த வாகனத்தில்
நீலநிற சட்டை வெள்ளைபேண்ட்
போட்டு வருவது எடுப்பாகும்.
காலை பின்னால் தூக்கிப் போடுவதும்
காலரை முன்னால் இழுத்து விடுவதும்
நேரம் பார்க்க குனிந்து நிமிர்வதும்
ஆணான இவனுக்கு எடுப்பாகும்.
வீணாக பார்த்து ஏங்கவும்
நாளாக நாளாக ஆசையும்
தாளாத முடியாமல் முடிவுக்கு
தானாகவே மனம் தயாரானது
நேராக போனது கால்கள்
பாராமல் இருந்த அவனிடம்
காதல் வார்த்தை பேசிட
வேண்டும் என்ற முடிவினில்,
கூப்பிட பார்த்த நேரம் தன்னில்
தானாகவே திரும்பினான் மிக அருகில்
பேசிக் கொண்டிருந்தான் அலைபேசியில்
யாரென தெரிந்தது அவனின் உரத்தகுரலில்
"ஆமாம் நான்சொன்னது சொன்னதுதான்,
வேறு எதுவும் கேட்காதே அம்மா...
கேட்ட விவாகரத்து கேட்டதுதான்
பேசுகிறேன் பிறகு அம்மா " எனமுடித்தான்.
'என்ன ' என்றான் எனை நோக்கி
என்ன என்று சொல்வது அவனிடம்
என்ன நடந்தது என்று தெரிகிறது
என்ன செய்வது என புரியாமல்..
என்னை நொந்து கொண்டே
அவனை ஏக்கத்துடன் பார்க்க
அவனும் ஏதோ சென்றவன்
சிறிது தூரத்தில் திரும்பிப் பார்த்தான்
அவன் பார்வையில் என்னை மேய,
அதன் நோக்கத்தை நன்றாய் அறிய
அங்கே தெரிந்தது நம்பிக்கை ரேகை
உனக்கு நானெனக் காட்டினேன் ஜாடை...!
- துரை சேகர்
கோவை.