tamilnadu epaper

எங்களின் அணு ஆயுதங்கள் குறித்து இந்தியா கூறியது விரக்தியின் வெளிப்பாடு: பாகிஸ்தான்

எங்களின் அணு ஆயுதங்கள் குறித்து இந்தியா கூறியது விரக்தியின் வெளிப்பாடு: பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஷஃப்கத் அலி கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தக் கருத்து பொறுப்பற்றது. இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான பாகிஸ்தானின் பாரம்பரிய பாதுகாப்பு வழிமுறைகள் மீது இந்தியாவுக்கு உள்ள ஆழ்ந்த விரக்தியையே இது வெளிப்படுத்துகிறது. ‘அணுசக்தி அச்சுறுத்தல்’ இருப்பதாக இந்தியா கூறுவது, அது தனக்குத்தானே ஏற்படுத்திக்கொள்ளும் துயரம்.



இந்திய பாதுகாப்பு அமைச்சரின் கருத்துகள், சர்வதேச அணுசக்தி முகமை போன்ற ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிறுவனத்தின் ஆணை மற்றும் பொறுப்புகள் குறித்த அவரது அறியாமையையே காட்டுகிறது. இந்தியாவில் அணு மற்றும் கதிரியக்கப் பொருட்கள் திருடப்படுகின்றன அல்லது சட்டவிரோதமாக கடத்தத்தப்படுகின்றன. இது குறித்து சர்வதேச அணுசக்தி முகமை மற்றும் சர்வதேச சமூகம் கவலைப்பட வேண்டும். அணுசக்தி மற்றும் பிற கதிரியக்கப் பொருட்களின் பாதுகாப்புக்காக இந்தியா எடுத்த நடவடிக்கைகள் என்ன?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



முன்னதாக, பஹல்காம் தாக்குதல் மற்றும் அதற்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு முதல்முறையாக இன்று ஸ்ரீநகர் சென்ற ராஜ்நாத் சிங், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “நான் இங்கு ஒரு தபால்காரராக உங்கள் மத்தியில் வந்து நாட்டு மக்களின் செய்தியைக் கொண்டு வந்துள்ளேன். அவர்களின் செய்தி 'நாங்கள் அனைவரும் உங்களைப் பற்றி பெருமைப்படுகிறோம்' என்பதாகும். ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் ஒரு நடவடிக்கையின் பெயர் மட்டுமல்ல, அது எங்கள் உறுதிப்பாடு. இது போன்ற ஓர் உறுதிப்பாட்டின் மூலம் இந்தியா பாதுகாப்பை மட்டுமல்ல, தேவைப்படும்போது வலுவான முடிவுகளையும் நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதைக் காட்டியது.


பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகள் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்திய ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். எதிரிகளை அழித்த அந்த சக்தியை உணர நான் இங்கே இருக்கிறேன். எல்லையில் இருந்த பாகிஸ்தானிய பயங்கரவாத முகாம்கள் மற்றும் பதுங்கு குழிகளை நீங்கள் அழித்த விதத்தை, எதிரிகளால் ஒருபோதும் மறக்க முடியாது என்று நினைக்கிறேன்.


இவ்வளவு பொறுப்பற்ற மற்றும் முரட்டுத்தனமான நாட்டின் கைகளில் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக இருக்குமா என்று நான் முழு உலகத்தையும் கேட்கிறேன். பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.