கோவில்பட்டி வரலாற்று சிறப்புமிக்க ஊரென்றால் மிகை அல்ல. கரிசல் பூமி யான இவ்வூர் பல சிறப்புகளை தன்னகத்தே தன்னடக்கமாய் கொண்டுள்ளது. முதலில் நினைவுக்கு வருவது கோவில்பட்டி கடலை மிட்டாய். அடுத்ததாக ஹாக்கி விளையாட்டு. மற்றும் பல இலக்கியவாதிகளை தமிழுக்கு அளித்த பெருமை உடையது. கோவில்பட்டி கடலை மிட்டாய். ----------------------------------------------------- இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் கோவில்பட்டி கடலை மிட்டாய் பிரசித்தி பெற்றது. இந்தக் கரிசல் மண்ணிற்கு உரித்தான பாங்கையும் வாசனையும் பெற்று திகழ்கிறது. நிலக்கடலை இக்க கரிசல் மண்ணிற்கு பொருத்தமான எண்ணெய் வித்து பயிராக அமைந்துள்ளது. இந்த கடலை மிட்டாயை தயாரிக்கும் முறையும், பக்குவமுமே இதன் சுவைக்கு சிறப்பாகும். கையூடாக கடலை மிட்டாய் கொடுத்தே காரியம் சாதித்தவர்களும் உண்டு. இந்த மிட்டாய் சிறுவர் முதல் பெரியவர்களுக்கு சிறந்த சுவை மிக்க உணவாகும். இங்கு தயாரிக்கும் கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பதிலிருந்தே இதன் பெருமைகளை அறியலாம். ஹாக்கி பட்டி -கோவில்பட்டி. ----------------------------------------------- தேசிய விளையாட்டான ஹாக்கி (வளைகோல் பந்து ) கோவில்பட்டியில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே பயிற்சியளிக்கப்பட்டும், விளையாடப்பட்டும், அகில இந்திய போட்டிகள் நடைபெற்ற வந்திருக்கிறது. குப்புசாமி ஸ்டேடியம் தமிழக அளவில் ஹாக்கி விளையாட்டிற்கு நினைவு கூறப்படும் மைதானம் ஆகும். இந்நகரை சேர்ந்த பல வீரர்கள் தேசிய அளவிலான ஹாக்கி போட்டி மற்றும் வெளிநாடுகளிலும் போட்டிகளில் பங்கு பெற்று சாதனை படைத்துள்ளனர். அகில இந்திய ஹாக்கி போட்டியை இந்நகரில் பலமுறை நடத்தியுள்ளார்கள். தற்பொழுது அரசு கலைக்கல்லூரி அருகில் சேர்க்கை புள்ளிகளின் மைதானம் அரசு அமைத்துள்ளது. இன்றும் சிறு வயது மாணவர்கள் ஹாக்கி மட்டையுடன் அதிகாலையில் பயிற்சிக்கு சென்று வருவதை கண்கூடாக காணலாம். மேஜர் டயான்சென்ட் ஒரு காலத்தில் கோவில்பட்டி வந்து பயிற்சி அளித்த வரலாறும் உண்டு. கோவில்பட்டிக்கு சிறப்பு பெயராக 'ஹாக்கிப்பட்டி' என்று அழைப்பதில் எங்கள் ஊருக்கு பெருமையே. கோவில்பட்டி- இலக்கிய பண்ணை. ------------------------------------------------------------- கரிசல் பூமியான கோவில்பட்டியில் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் கு. அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், பூமணி, சோ.தர்மன் போன்றவர்கள் கரிசல் இலக்கியத்திற்கு பெருமை சேர்த்த மணி மகுடங்கள். இவர்கள் படைத்த கரிசல் இலக்கியங்கள் காலத்தால் என்றும் அழியாதவை. இந்த கரிசல் பூமி உள்ளளவும் அவைஅவர்களின் பெயர் சொல்லும். இதுபோன்று மேலும் உதய சங்கர், கோணங்கி, தேவ தச்சன், நாறும் பூநாதன், சாரதி, மாரிஸ், அப்பணசாமி, சுந்தரம் பிள்ளை, முருக பூபதி, இவ்வாறு எண்ணற்றோர் இலக்கியத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். நூற்றாண்டை கடந்த தோழர் சங்கரய்யா தனிச்சிறப்பு. கம்யூனிசத்தின் வேர் துளித்த இடம். நூற்றாண்டு கண்ட வேளாண் ---------------------------------------------------- ஆராய்ச்சி நிலையம். ------------------------------------ இந்த கரிசல் பூமியில் 1901 ஆம் ஆண்டு வேளாண் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது.பருத்திமற்றும் சிறு தானிய ஆராய்ச்சி நிலையமாக செயல்பட்டது. தற்போது சிறந்த மானாவாரி வேளாண் ஆராய்ச்சி நிலையமாக செயல்பட்டு வருகிறது. இப்பகுதி உழவர்களுக்கு பேருதவி யாக திகழ்ந்து வருகிறது. விஞ்ஞானிகளி தொய்வில்லா ஆராய்ச்சி பணிகளினால் சிறந்த வேளாண் ஆராய்ச்சி நிலையத்திற்கான விருதையும் பெற்றுள்ளது என்பது இதன் சிறப்பம்சமாகும். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் முதன் முதலில் பணியாற்றியது இங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 80க்கும் மேற்பட்ட பல புதிய ரக மானாவாரிப் பயிர்களை உருவாக்கிய பெருமை இந்நிலையத்திற்கு உண்டு. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறந்த உள்ளுறை பயிற்சி களமாக திகழ்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக உழவர்களுக்கு சிறந்த பயிற்சிக்களமாக விளங்கி வருகிறது.
கோவில்பட்டி பஞ்சாலைகள். ---------------------------------------------------- கோவில்பட்டியில் பல தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக நூற்றாண்டுக்கு மேலாக திகழ்ந்து வருபவை லாயல் நூற்பாலையும், லட்சுமி நூற்பாலையும் என்றால் மிகையாகாது. நவீன இயந்திரங்களை பயன்படுத்தி இயங்கி வருகிறது. சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதுகாப்பு உடையதாகும். லாயல் பஞ்சாலை இந்தியாவிலேயே முதன் முதலில் ISO சரச் சான்றிதழை பெற்ற ஆலை என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்மீக ஸ்தலம் *கோவில்பட்டி. ------------------------------------------------------ பெயருக்கு ஏற்றார் போல் கோவில்பட்டி பல ஆலயங்களை கொண்டதாகும். ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில், சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில் , ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோவில்,, ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்,புனித வளனார் ஆலயம், பள்ளிவாசல் போன்ற பல திருத்தலங்களை கொண்டதாகும். பல கோவில்களை பெற்றிருப்பதால் கோவில்பட்டி என்ற காரணப் பெயரும் இதற்கு உண்டு. By ரெ. சுப்பா ராஜு,
-N. S. S. திட்ட அலுவலர். Ret.
கோவில்பட்டி.