சேங்காலிபுரம் சக்தி திருத்தலம். சிவனும் காளியின் மறுவடிவான அம்பிகையும் உலக மக்கள் குறை தீர்க்க திருக்காட்சி அளித்த தலம் என்பதால் 'சிவன் காளிபுரம்' என்று அழைக்கப்பட்டு பின்னர், பெயர் மருவி 'சேங்காளிபுரம்' என்றும், பின்னும் 'சேங்காலிபுரம்' என்றும் மருவியது.
இந்த ஊர் ;கும்பகோணம்-திருவாரூர் வழித் தடத்தில் குடவாசலில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த சிறிய கிராமத்தில் பதினெட்டுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றே வரலாற்று புகழ்பெற்ற ஸ்ரீ தத்தாத்திரேயர் ஆலயம் ஆகும், இந்த ஆலயத்தில் ஸ்ரீ தத்தாத்திரேயர் மற்றும் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனாவின் மிக சக்தி வாய்ந்த யந்திரங்கள் மற்றும் ஸ்ரீ தத்தாத்திரேயரின் பாதுகைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படுகின்றன. அத்தகைய சக்தி வாய்ந்த யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள ஒரே ஆலயம் இதுவே ஆகும்.
தத்தாத்ரேயர், பிரம்மன், திருமால், சிவன் மூவரையும் உள்ளடக்கிய இந்துக் கடவுள் ஆவார். இவரை திரிமூர்த்தி எனவும் அழைப்பர். சில இந்து சமயப் பிரிவினர் இவரை திருமாலின் வடிவமாகக் கருதுகின்றனர்.
ஸ்ரீ தத்தாத்ரேயர் கோயிலுக்குச் சென்றால் ஆன்மீக ஞானம் நிச்சயம் கிடைக்கும். சுற்றுப்புறம், மத முக்கியத்துவத்துடன் இணைந்து, இந்த கோவிலுக்கு பிரதிபலிப்பு மற்றும் பக்திக்கான சரியான அமைப்பை வழங்குகிறது. ஒருவர் பக்திமான்களாக இருந்தாலும் சரி, ஆர்வமுள்ள பயணியாக இருந்தாலும் சரி, இந்த ஆலயத்தின் புனிதத்தன்மையும், தத்தாத்ரேயருக்கு காணிக்கை செலுத்துவதும் தமிழ்நாட்டின் ஆன்மீக பாரம்பரியத்தை அறிய அனுமதிக்கின்றன. வழிபாட்டுத் தலமாக இருப்பதைத் தவிர, இது அமைதி மற்றும் அமைதியின் சின்னமாகும், இது ஆன்மீக ரீதியில் ஆறுதல் பெற வேண்டிய இடமாக அமைகிறது.
பரமேசுவரனே அத்ரி முனிவருக்கு மகனாகப் பிறப்பதாக உறுதியளித்து தத்தாத்ரேயராகத் தோன்றினார் என்பர்.
ஸ்ரீ தத்தாத்திரேயர் இந்து தெய்வங்களில் சக்தி வாய்ந்த ஒரு தெய்வம். அவர் மானிட உருவில் உள்ள நிலையை குருக்களுக்கே குரு எனப்படும் ஆதி குரு அல்லது சத்குரு அல்லது பரிபூரண குரு, அதாவது தெய்வீக நிலையில் உள்ள குரு என்பார்கள்.
அவர் எப்படி அழைக்கப்பட்டாலும் வேத காலத்தில் வாழ்ந்திருந்த அத்ரி மகரிஷி மற்றும் பத்தினி தெய்வமான அனுசூயா தம்பதியினர் மூலம் தோன்றிய ஒரு அவதூதர் ஆவர். அவதூதர் எனப்பட்டவர் இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரையும் ஆன்மீகத்தின் மேன்மையான நிலைக்கு, தம்மை படைத்தவரிடமே மீண்டும் ஐக்கியம் ஆகும் ஆனந்த நிலைக்கு அழைத்துச் செல்பவர். அவர் தன்னைத் தானே முற்றிலும் உணர்ந்துள்ள மெய்யுணர்வாளர், தூல, காரண மற்றும் சூக்கும எனும் மூன்று உடல்களிலும் இருந்தவாறு இறை பணியில் ஈடுபட்டுக் கொண்டு தம்மை நாடி வந்தவர்களுக்கு ஆன்மீக மன விடுதலை தருபவர் ஆகும்.
ஒரு அவதாரம் என்பது தெய்வம் பூவுலகில் எடுத்த ஒரு வடிவம் ஆகும் என்பதினால் ஸ்ரீ தத்தாத்திரேயர் ஒரு அவதாரமா அல்லது குருவா அல்லது இரண்டும் சேர்ந்த ஒருவரா என ஒரு கேள்வி எழலாம். அதன் காரணம் அவர் பூலோகத்தில் அலைந்து திரிந்தவாறு இருந்த அவதூதர் எனும் உருவில் இருந்தவர். குரு என்பவர் பூவுலகில் மானிடராகப் பிறந்து, ஆன்மீகத்தில் பயணித்து, மாயை என்பதை வெற்றி கொண்டு, இறை நிலையை எட்டியவர் ஆகும். ஆனால் தெய்வீக அவதாரம் என்பதோ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அவ்வப்போது பூமிக்கு வந்து, குரு அல்லது அவதூதர் அல்லது வேறு எந்த உருவிலாது இருந்து கொண்டு பட்டும், படாமலும் மக்களிடையே வாழ்ந்து கொண்டிருந்தவாறு, மனிதர்களுக்கு நன்னெறி வழிமுறைகளை காட்டியவாறு, அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்து கொண்டு இருப்பார்கள்.
அவர்களது தெய்வீகம் பிறர் கண்களுக்கு வெளித் தெரியாது. அவர்கள் எந்த தாயின் வயிற்றிலும் தங்கி இருந்து பிறப்பு எடுப்பது இல்லை. அவர்கள் தோன்றியது மட்டுமே வெளித் தெரியும், ஆனால் பிறப்பு பற்றி எதுவுமே தெரியாது. பிரபஞ்சத்தை உருவாக்கிய பரபிரும்மன் ஒவ்வொரு உயிரினமும் வாழத் தேவையான நடத்தை முறைகளை உள்ளடக்கிய பூமியை படைத்து, அவ்வப்போது தானே அங்கு அவதரித்து, தன் வாழ்க்கையையே அவர்களுடைய நலனுக்கு தந்து, ஒரு ஆசிரியர் போன்று வாழ்ந்து வருகின்றார். தத்தா என்றால் தன்னையே தந்தவர் என்பது பொருள் என்பதினால்தான் அவதூதராக காட்சி அளித்த, உலக நலனுக்காக தன்னையே அர்பணித்திருந்த பரபிரும்மமான, பரிபூரண தெய்வத்தை ஸ்ரீ தத்தாத்திரேயர் என அழைத்தார்கள். அந்த அவதூதரோ சர்வ வல்லமையுள்ள இறைவன், எல்லாம் அறிந்த, சர்வ ஞானமும் பெற்ற எங்கும் நிறைந்திருக்கிற இறைவன் ஆவார்.
எந்த ஒரு பக்தருக்கும் தோன்றும் ஒரு கேள்வி என்ன எனில், பூமியிலே பிறப்பு எடுக்கும் அவதாரங்கள் எந்த அளவிலான தெய்வீக சக்திகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கும்? ஆன்மீக மகான்கள் தெய்வங்களின் தெய்வீக சக்தி குறித்து இப்படியாகக் கூறுகின்றார்கள். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு குறிப்பிட்ட அளவிலான -ஒன்பது முதல் பதினாறு- தெய்வீக சக்தி அலைகள் பரபிரும்மனால் தரப்பட்டு உள்ளன. தெய்வீக சக்தி அலைகளை கலசம் என்பதாகக் கூறுவார்கள். ஒவ்வொரு கலசமும் லட்ஷக்கணக்கான தெய்வீக சக்தி அலைகளை உள்ளடக்கி இருக்கும். பூமியிலே அவதரிக்கும் தெய்வங்கள் முழுமையான சக்தி கலசங்களை எடுத்துக் கொண்டு பூமியில் அவதரிக்க முடியாது. என்பதின் காரணம் அவை சாப விமோசனம் பெற மற்றும் வேறு காரணங்களினால் பூமியில் பிறப்பை எடுக்கின்றன எனும்போது சக்திகள் குறைந்தே இருக்கும் என்பதினால் பரபிரும்மன் கொடுத்திருந்த உண்மையான தெய்வீக சக்திகளை எடுத்துக் கொண்டு அவற்றால் வர இயலாது. பரிபூரண அவதார தெய்வங்களால் மட்டுமே முழுமையான தெய்வீக சக்திகளுடன் பூமியிலும் இருக்க முடியும்.
அதனால் பரபிரும்மனான ஸ்ரீ தத்தாத்திரேயரால் மட்டுமே முழு அளவிலான தெய்வீக சக்தி அலை கலசங்களைக் கொண்ட பூர்ண தெய்வ அவதாரமாக, ஒரு அவதூதர் வடிவில் தனித் தன்மையோடு, பூமியிலே எந்த குடும்ப விவகாரங்களிலும் ஈடுபடாமல், எந்த ஒரு தாயின் கருவிலும் தங்கி பிறக்காமல், நேரடியாகவே ஒரு அவதாரத்தை எடுத்து, முழுமையான குரு எனும் ஆசிரியராகவே பூமியிலே வாழ முடிந்தது. ஸ்ரீ தத்தாத்திரேயரைத் தவிர்த்து வேறு எந்த தெய்வமும் பூர்ண தெய்வ அவதாரமாக பூமியில் பிறப்பு எடுக்கவில்லை என்பதாகவே ஆன்மீகப் பண்டிதர்கள் கூறுகின்றார்கள் என்பதின் காரணம் ஸ்ரீ தத்தாத்திரேயர் உருவமற்ற பரபிரும்மானின் இன்னொரு தோற்றம் ஆகும்.
ஸ்ரீ ராமபிரான், ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் அவர்கள் போன்ற பல தெய்வங்கள் எப்படி வெளிப்படையாக தாயின் வயிற்றில் இருந்து வெளியாகி (பிறப்பு) அனைவரும் காணும் வகையில், தமது அவதாரங்களை முடித்துக் கொண்டு, உடலை துறந்து சென்றார்களோ, அப்படி இல்லாமல் அந்த அவதூதர் எங்கே, எப்போது சென்றார் என்பதே தெரியாத நிலையில் அவரது அவதாரம் முடிந்து உள்ளது என்பதில் இருந்தே அவரே நிரந்திரமான, அழிவிவற்ற, எங்கும் நிறைந்த, எல்லையற்ற பரபிரும்மன் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அவதூத்தின் வடிவத்தில் தோன்றிய ஸ்ரீ தத்தாத்திரேயர் அவ்வப்போது தனது உண்மையான தெய்வீக அவதாரத்தையும் தனது பக்தர்கள் சிலருக்கு காட்டி வந்து, வெளித் தெரிந்த அவதூத தோற்றம் தனது ஒரு தெய்வீக சக்தி அலையே, ஒரு மாய உருவே, என்ற உண்மையை நிலை நாட்டினார். பல தலைமுறைகளுக்குப் பிறகு அவர் தனது தெய்வீக சக்தி அலைகளை தாய்மார்களின் வயிற்றில் இருந்து பிறந்து, அவதரித்த சில மகான்களுக்கு அளித்து அவர்களே தம்முடைய அம்சம் என்ற உண்மையையும் நிலை நாட்டினார். அவற்றில் சில மஹான்கள் சம காலத்தில் வாழ்ந்தவர்கள். அவர்கள் மறைந்த விதமும் அனைவர் முன்னிலையிலும் வெளிப்படையாக நடந்தது. ஆனால் அவதூதர் உருவிலான ஸ்ரீ தத்தாத்திரேயர் மட்டுமே தடயமே இல்லாமல் மறைந்தது அவர் அவதார சரித்திரத்தின் ஒரு வியப்பான தகவல் ஆகும்.
அத்தகைய பெருமை மிக்க பரபிரும்மனான ஸ்ரீ ததத்தாத்திரேயரின் மகிமையை உணர்ந்த, சேங்காலிபுரத்தில் பிறந்த மகான் ஸ்ரீ ரமனானந்த ஸ்வாமிகள் என்பவர் காசிக்கு சென்று அங்கு தங்கி இருந்த 120 வயதான மாபெரும் முனிவர் படகு சுவாமிகள் என்பவரை சந்தித்து அவரிடமிருந்து மகா மந்திர தீட்சையைப் பெற்றார். தீட்ஷை பெற்று திரும்பக் கிளம்பியவரிடம், தென் இந்தியாவில் ஸ்ரீ தத்தாத்திரேயருக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு படகு ஸ்வாமிகள் கூறினார். இதனால் சேங்காலிபுரத்திற்கு திரும்பிய ஸ்ரீ ரமனானந்த ஸ்வாமிகள் முதலில் சேங்காலிபுரம் ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் ஸ்ரீ தத்த ஜெயந்தியை கொண்டாடிய பின்னர், மெல்ல மெல்ல ஆலயம் அமைக்க யோஜனை செய்திருந்தபோது, ஒருமுறை ஸ்ரீ தத்தாத்திரேயரும் அவரது கனவில் தோன்றி, பிரஹலதா புஷ்கரணி என்ற பெயரிடப்பட்ட குளத்தின் வடக்குப் பக்கத்தில் உள்ள அரச மரத்தின் கீழ் தனக்கு ஒரு ஆலயத்தை அமைக்குமாறு கூறியதால் சற்றும் தாமதிக்காமல் குரு மற்றும் ஸ்ரீ தத்தாத்திரேயரின் கட்டளைப்படி சேங்காலிபுரத்தில் ஸ்ரீ தத்தாத்திரேயருக்கு ஒரு ஆலயத்தை அமைத்து அதற்கு ஸ்ரீ தத்தா குடில் எனப் பெயரிட்டார்.
ஸ்ரீ தத்தாத்திரேயருக்கு நிறுவிய ஆலயத்தில் 1008 பீஜ மந்திர அட்ஷரங்கள் கொண்ட ஸ்ரீ தத்தாத்திரேயர் யந்திரம், மற்றும் ஸ்ரீ கர்த்தவீர்யாஜுனரின் யந்திரத்தையும் முறைப்படி ஆவாஹனம் செய்து பிரதிஷ்டை செய்தார். இப்படிப்பட்ட யந்திரங்கள் வேறு எந்த ஸ்ரீ தத்தாத்திரேயர் ஆலயத்திலும் கிடையாது என்பது இந்த ஆலயத்தின் மகிமைக்கு ஒரு சான்றாகும்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் (டிசம்பர் மாதத்தில்) ஸ்ரீ தத்த குடிரத்தில் ஸ்ரீ தத்தாத்திரேய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. பல்வேறு புனித பூஜைகள் நடைபெறுகின்றன. புகழ் பெற்ற தொட்டில் உற்சவம் (தொட்டில் திருவிழா) மற்றும் பாலூட்டும் வைபவம் (பால் கொடுக்கும் விழா) ஆகியவையும் நடைபெறுகின்றது. மழலை செல்வம் அற்றவர்கள் இங்கு வந்து குழந்தை வரம் வேண்டிக் கொண்டு ஸ்ரீ தத்தாத்திரேயருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.
எஸ்.ரவீந்திரன், சென்னை -56-