மூச்சிரைக்க ஓடிக்கொண்டுதானிருக்கிறேன்
இதோ இப்போதும்கூட..
யோசிக்கையில் கடந்த கணங்களெல்லாம்
சட்டென முடிந்த கவிதையைப்போல்
வெறுமை பூசிக்கொள்கிறது..
கடந்தவை காயங்களாய் வலியெடுக்க
வடுக்கள் பதித்த வார்த்தைகளின் ரணம்
இன்னமும் ஆறவேயில்லை..
முகம்மாறிப்போன வதைகளால்
இடம் மாறிய இதயங்கள்
சிதைவுறும்..
தனிமையும் வெறுமையும் மட்டுமே வரமென
ஒரு எழுதப்படாத தீர்ப்பு
எனக்கு வழங்கப்படுகிறது..
வார்த்தைகளின் அம்புகள் கூரானவை
வலிசேர்ப்பவை..
ஒரு வரையறுக்கப்பட்ட வெற்றிடத்தைநோக்கி
தினம் அனுமானிக்கப்படுகிறது
உன்னாலான கவிதையொன்று..
தூரங்களுக்கப்பால் நீ
நகர்ந்து மறைகிறாய்..
திடுமென அருகிலுன் புன்னகை
ஆச்சர்யமூட்டும் அபூர்வமாகும்..
எனக்கான உன் பிரியத்தோடு
சட்டென முடிந்துவிட்டாலென்ன
இத்துயர் பயணம்..
வழிநெடுகிலும் முள்கிழித்து
ரத்தம் சொட்டும்
இக்கொடும் நரகம்
நீ காட்சிப்படும் சொர்க்க கணத்தோடு
கலைந்துவிட்டால் என்ன..
நீ என்மேலான நேசத்தோடு
சற்று மடி சாய்த்துக்கொள்..
அக்கணமொன்றில் முடிந்துபோகட்டும்
என் நீள்துயரம்..
உன் சுவாசத்தை பருகுவதோடு
முடிந்துபோகட்டும் என் உயிர் இருப்பு..
கனவுகள் மெய்ப்பதில்லை
இரவுகள் முடிவதில்லை
விழிகளில் உறக்கமில்லை..
நீ அருகற்ற நரகத்தோடு
என் முன் நீண்டுகிடக்கிறது
வாழ்வின் சலனங்கள்..!
ம.முத்துக்குமார்
வே.காளியாபுரம்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?