கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை
சொன்னது நமது
பண்டையப் பெரியோர்!
சுற்றமும் நட்பும்
சூழ்ந்திட வாழ்ந்தேன்!
போலி அன்பின்
பற்களில் வீழ்ந்தேன் !
சுயநலமே சுயமாய்
கொண்ட மனிதர்கள்
தனக்கென தின்றுக்
குதறிய மிச்சங்களில்
எனக்கென ஏதும்
காணாதைக் கண்டு
வாழ்கிறேன் எனக்காக
இன்றைய தனிமையில்
ஒற்றுமை என்றும்
பலமாம் என்றில்லை
யாருமில்லா அறையினிலே
சந்தடியில்லா அமைதியிலே
யாரிடமும் கிடைக்காத
மகிழ்ச்சியுமெங்கோ
மறைந்திருக்கிறது
செல்வமும் மதிப்பும்
சிதறிய பொழுதிலும்
ஊரும் உறவும்
உதறியப்பொழுதிலும்
உள் மனம் ஊமையாகி
கதறியப் பொழுதிலும்
தன்மானம் தானிருந்து
தூணாக மாறிநின்று
தனிமையை
துணையாக்குகையில்
தன்னையே
துணிவாக்குகையில்
ஆதங்க பெருமூச்சுகள்
விலகியேச் சென்றது
நிம்மதி பெருமூச்சுகள்
நினைவுகளுடனே நின்றது
தானே ஏற்றத்
தனிமையிலும்
சொல்ல வியலா
இனிமையுமேதோ
இருக்கத்தான்
செய்கிறது
அதிலவரவர்
அனுபவங்களின்
எதிரொலியும்
அடங்கித்தான்
இருக்கிறது
-ரேணுகா சுந்தரம்