முகில் தினகரனின் 'வந்தாண்டா பால்காரன்', ஹரணியின் 'நாணயம் செல்லும்' ஆகிய இரண்டு சிறுகதைகளையும் படித்தேன். இந்த சிறுகதைகளை எழுதிய முகில் தினகரன், ஹரணி இருவருமே பிரபலமான எழுத்தாளர்கள். நாவல்கள், கவிதைகள் என்று பல புத்தகங்களை எழுதியவர்கள். அதனால்தான் அவர்களது இந்த சிறுகதைகளில் ஒரு நயமான அழகும், உயிரோட்டமான ஒரு உணர்வும் ஏற்பட்டு அற்புதமென்று சொல்ல வைக்கிறது.
ஆன்மிக களஞ்சியத்தில் அமர்நீதி நாயனாரின் வரலாற்றை சிவ.முத்து லட்சுமணன் சுவாரஷ்யமாக எழுதியிருந்தார். கோவணக் கள்வராக வந்த சிவபெருமானின் முன்பு தராசில் தன் மனைவி, மகனுடன் ஏறி தன்னையே அவருக்கு அர்ப்பணித்து, அத்தட்டே விமானமாகச் செல்ல, சிவபதம் பெற்ற பெருமைக்குரியவர் அமர்நீதி நாயனார் என்பதை படிக்கும்போது ஒரு ஆன்மிக அற்புதத்தை உணர முடிகிறது.
எம்.அசோக்ராஜா சாஸ்தாவின் முக்கிய எட்டு அவாதாரங்களையும் விளக்கி, ஒவ்வொரு அவதாரமும் எந்த ஒரு நோக்கத்திற்காக எடுக்கப்பட்டது என்பதை விளக்கமாக எழுதியிருந்தது சிறப்பாக இருந்தது. எனக்கு முதலில் சாஸ்தாவில் இத்தனை அவதாரங்கள் இருப்பதே தெரியாது. பல புதிய ஆன்மிக தகவல்களை தருவதில் தமிழ்நாடு இ.பேப்பருக்கு ஒரு தனியிடம் உண்டு.
தினம் ஒரு தகவல்கள் வரிசையில் ம. சிங்காரவேலரைப் பற்றி படித்து வியந்துப் போனேன். அவருக்கு ஆங்கிலம், தமிழ் மொழிகளை தவிர, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளும் தெரியும் என்பதும், அவர் 20,000 நூல்களுக்கும் மேல் சேகரித்து வைத்திருந்தார் என்பதும், ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வைத் தொடர்ந்து காந்தி ஒத்துழையாமை போராட்டத்திற்கு அனைத்து வழக்குரைஞர்களுக்கும் அழைப்பு விடுவித்தபோது, இவர் தனது வழக்குரைஞர் ஆடையை எரித்ததுடன், "இனி எப்போதும் வக்கீல் தொழில் பார்க்க மாட்டேன். என் மக்களுக்காகப் பாடுபடுவேன்" என்றதும், இவர் எவ்வளவு சிறந்த உயர்ந்த மனிதர் என்பதை உணரவைத்தது.
கிட்டத்திட்ட நாற்பது புதுக்கவிதைகள். எல்லாமே விதம் விதமான மலர்கள் போல வித்தியாசம் வித்தியாசமாக ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் மனதைக் கவருகின்றன. தமிழ்நாடு இ.பேப்பரில் ஒரு முக்கியமான பகுதியாக இந்த இந்த புதுக்கவிதை பகுதிகள் விளங்குகிறது.
'தெய்வீக அருள் தரும் ஆன்மிகம்' சிறப்பாகவும் மனதிற்கு ஒரு அமைதியை தருவதாகவும் இருக்கிறது. தமிழ்நாடு இ.பேப்பரை படித்து முடிக்கும்போது அடுத்த இதழை எதிர்பார்த்து மனம் ஏங்க ஆரம்பித்து விடுகிறது. இதுதான் நமது பத்திரிகையின் மிகப்பெரிய சிறப்பாகும்.
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.