கிளாஸ் டீச்சர் ஸ்ரீனிவாச ராமானுஜம்.கணக்கு வாத்தியாரும் அவரே. தலைமை ஆசிரியரிடமிருந்து வந்திருந்த சுற்றறிக்கையை" />
ஸ்ரீ கிருஷ்ணனைப்பற்றி படித்தாலே கிடைக்கும் புண்ணியம்.இதோ ஒரு சிறிய கதை
ஆறாம் வகுப்பு "ஏ" பிரிவு.
கிளாஸ் டீச்சர் ஸ்ரீனிவாச ராமானுஜம்.கணக்கு வாத்தியாரும் அவரே. தலைமை ஆசிரியரிடமிருந்து வந்திருந்த சுற்றறிக்கையை மாணவர்களுக்கு வாசித்தார்.
" அடுத்த வாரம் வரவிருக்கும் தந்தையர் தின விழாவை இந்த பள்ளி நிர்வாகம் மிக விமரிசையாக கொண்டாட முடிவு செய்துள்ளது. அதற்காக ஒவ்வொரு மாணவனும் மாணவியும் தங்களால் முடிந்த அளவு ஏதாவது பொருளை கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது."
சுற்றறிக்கையை படித்து முடித்த ஆசிரியர் ஸ்ரீனிவாச ராமானுஜம் எல்லா மாணவ மாணவிகளிடமும் அவரவர்கள் என்ன கொடுக்கப் போகிறார்கள் என்று இரண்டு நாட்களில் சொல்லவேண்டும். ஆனால் பொருளை விழா அன்று கொடுத்தால் போதும் என்று சொன்னார்.
அந்த வகுப்பு மாணவன் அனிருத் மிகவும் ஏழை.அப்பா இறந்து விட்டார். அம்மா இரண்டு மூன்று வீடுகளில் வீட்டு வேலை செய்து பிழைப்பை நடத்த வேண்டிய கட்டாயம். பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் அனிருத் அம்மாவிடம் ஆசிரியர் சொன்ன எல்லா விவரங்களையும் சொல்லிவிட்டு கேட்டான்.
" நான் என்ன கொடுக்க முடியும் என்று சொல்லும்மா"
" நம்மிடம் என்னப்பா இருக்கிறது கொடுக்க. ஏழைகளுக்கு உதவுவதற்கு இருக்கிறானே கண்ணன். அவனைக்கேட்டுவிட்டு அவன் என்ன கொடுக்கிறானோ அதைக் கொண்டு போய்க்கொடு."
அனிருத்துக்குத் தெரியும் அம்மாவுக்குத்தான் எவ்வளவு நம்பிக்கை கண்ணன் மேல்.எதற்கெடுத்தாலும் கண்ணன் பார்த்துக் கொள்வான் என்றல்லவா அம்மா சொல்கிறாள் .
" கண்ணனை எங்கே பார்க்க முடியும் அம்மா?"கேட்டான் அனிருத்
" நாளை பக்கத்தில் உள்ள காட்டுக்கு போ .கண்ணா கண்ணா என்று கூப்பிடு. கண்ணன் வந்து விடுவான்.அவனிடம் கேள்."
அனிருத் மறுநாள் காலை காட்டுக்கு சென்றான்." வாயின் இருபுறமும் கையை வைத்துக்கொண்டு கண்ணா கண்ணா என்று கூப்பிட்டான். ஊ ஹூம் .கண்ணன் வரவில்லை.இரண்டு மூன்று முறை கூப்பிட்டான்.கண்ணன் வரவில்லை. அவனுக்கு அழுகை வந்து விட்டது. கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட மறுபடியும் கூப்பிட்டான்" கண்ணா கண்ணா" என்று.
கூப்பிட்ட குரலுக்கும் ஏழையின் கண்ணீரைக் கண்டதும் ஓடோடி வருபவன்தானே கண்ணன்.
புல்லாங்குழல் சப்தம் கேட்டது. சட்டென்று திரும்பிப்பார்த்தான் அனிருத். கண்ணன் நின்று கொண்டிருந்தான். அனிருத் உடனே கண்ணனின் முன் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தான் அவன் பள்ளிக்கு புறப்படுவதற்கு முன் கண்ணனின் படத்தின் முன்னால் தினமும் செய்வதைப்போல.
" எழுந்திரு குழந்தாய் என்ன வேண்டும் ?" கேட்டான் கண்ணன்
அனிருத் எல்லாவற்றையும் விவரித்தான்.
"சரி நான் உனக்கு தயிர் கொடுக்கிறேன். அதை நீ உன் பள்ளியில் கொண்டுபோய் கொடு.விழா அன்று காலை இதே இடத்திற்கு வா.அன்று கொடுக்கிறேன்."என்று சொல்லி விட்டு மறைந்தான் கண்ணன்.
அனிருத் மறுநாள் ஆசிரியரிடம் சொன்னான் தான் தயிர் கொண்டு வந்து கொடுப்பதாக. ஆசிரியரும் சரி என்று சொல்லிவிட்டார்.
விழா அன்று காலை அனிருத் காட்டுக்கு சென்றான். அன்று கண்ணனைப் பார்த்த அதே இடம்.
" கண்ணா கண்ணா நான் வந்திருக்கிறேன்" என்று கூறியதும் கண்ணன் வந்து விட்டான்.
சொன்னதுபோல் தயிர் நிரம்பிய ஒரு சிறிய மண்ணாலான சொப்பை அனிருத்திடம் கொடுத்துவிட்டு மறைந்து விட்டான் கண்ணன்.
அனிருத்துக்கு ஒரே சந்தோஷம். பள்ளி சென்றதும் ஆசிரியரிடம் கொடுத்தான் அந்த தயிர் நிரம்பிய மண் சொப்பை. அவ்வளவு சிறிய சொப்பில் இருந்த தயிரைப் பார்த்ததும் ஸ்ரீனிவாச ராமானுஜத்துக்கு வந்ததே கோபம்.
இது ஒருவருக்கு கூட பத்தாது. இதை நீ கொண்டு வந்திருக்க வேண்டியதேயில்லை.இது தேவையில்லை என்று ஆத்திரத்துடன் கீழே கொட்டினார். அனிருத்துக்கு அழுகை வந்தது. இரு கன்னங்களிலும் கண்ணீர் வழிந்தது.
சொப்பில் இன்னும் இருக்கிறது தயிர்.அதையும் கொட்டினார் கீழே. இன்னும் இருக்கிறதே தயிர். சட்டென்று கவனித்தார் ஸ்ரீனிவாச ராமானுஜம் அவர் தயிரைக் கீழே கொட்டக் கொட்ட சொப்பில் தயிர் நிறைந்து கொண்டிருந்தது. அவருக்குப் புரிந்து விட்டது. இது ஏதோ தெய்வீகமானது என்று.
" இந்த தயிர் எங்கு கிடைத்தது உனக்கு " கேட்டார் அனிருத்திடம்
அனிருத் எல்லாவற்றையும் விவரித்தான்.
" ஐயோ எவ்வளவு பெரிய பாவம் செய்து விட்டேன்.கண்ணன் கொடுத்த பிரசாதத்தையல்லவா நான் ஆத்திரத்துடன் கீழே கொட்டினேன்.
கணக்கு வாத்தியாராக இருந்தும் தப்புக்கணக்கு போட்டுவிட்டேனே. கண்ணா என்னை மன்னித்தருள வேண்டும்" என்று மனதிலேயே புலம்பிக் தீர்த்து விட்டார்.
" அனிருத் இந்த சிறு வயதில் உனக்கு கிடைத்தது எவ்வளவு பெரிய பாக்கியம். கண்ணன் உனக்கு காட்சி அளித்ததே மிகப் பெரிய விஷயம்.உனக்கு பிரசாதமும் அல்லவா கொடுத்திருக்கிறான். இதற்கு மேல் என்ன வேண்டும். நீ கொண்டு வந்தது விலை மதிப்பற்றது." என்று சொல்லி அவனைத் கட்டித்தழுவினார்.
அன்று நடந்த விழாவில் அனிருத்தை பள்ளி நிர்வாகம் பாராட்டி கெளரவித்தது.
நீதி: ஒன்றிலிருந்து ஒன்றைக் கழித்தால் எஞ்சியிருப்பது பூஜ்ஜியம் நம் கணக்கில். ஆனால் ஓன்றிலிருந்து ஒன்றைக் கழித்தால் எஞ்சிநிற்பது ஒன்று. இது இறைவனின் கணக்கு.
-- முரளிதரன் ராமராவ்
புனே