வீட்டில் புழுக்கமாக இருந்தால், மின்விசிறியைப் போட்டுக்கொள்கிறோம். அல்லது குளிரூட்டியைப் (ஏ.சி.) பயன்படுத்துகிறோம்.
அதுவே மின்சாரம் பரவலாக இல்லாத அந்தக் காலத்தில், காற்றுக்காக நம் மூதாதையர் என்ன செய்தனர்? பனை ஓலையால் செய்யப்பட்ட விசிறியைத்தான் பெரிதும் பயன்படுத்தினர். இளம் குருத்தாக இருக்கும் பனை ஓலையை, அதன் மட்டையுடன் சேர்த்து வெட்டி எடுத்து வருவர். மட்டையை ஓலையுடன் இரண்டு பிளவாக பிளப்பர். மட்டை கனமாக இருந்தால் கைபிடிக்கும் அளவிற்கு சீவி எடுத்துக்கொள்வர். நீண்டிருக்கும் ஓலையின் நுனியை வெட்டி எடுத்துவிடுவர்.
வெட்டிய ஓலையை விரித்து மட்டையுடன் இருபுறமும் கட்டிவிடுவர். விரித்த ஓலை கிழிபடாமல் இருக்க, ஓரங்களில் மெல்லியதாக வளையும் மூங்கில் அல்லது ஈச்சம் குச்சியை வைத்து தைப்பார்கள். ஒரு ஓலையில் இரண்டு முழு விசிறிகள் செய்வார்கள். ஒரு பக்கம் மட்டும் வளைத்து செய்யப்படும் விசிறிகளும் உண்டு. இதை தொழில்முறையில் செய்வோர், இளம் ஓலைகளை வெட்டி எடுத்து காய வைக்கின்றனர். பின்னர் நீரில் நனைத்து சாயம் தோய்த்து, விசிறி செய்து விற்பனைக்கு வைக்கின்றனர். அழகுக்காக அவர்கள் அப்படிச் செய்கிறார்கள். பனை ஓலைகள் மனிதர்களுக்குத் தேவையான இயற்கைக் காற்றைக் கொடுத்தன. ஆனால், இப்போது நகர அங்காடிகளில், பெருவாரியாக நெகிழி விசிறிகள் (பிளாஸ்டிக்) ஆக்கிரமித்து இருக்கின்றன. நாம் அவற்றை, தவிர்க்க வேண்டும். மன்னர்கள் காலத்தில் அரசர்கள், மயிலிறகால் செய்யப்பட்ட விசிறிகளைப் பயன்படுத்தினார்கள்.
-பா.சீனிவாசன்,
வந்தவாசி.