tamilnadu epaper

கோபப்பட நேரமில்லை

கோபப்பட நேரமில்லை

 

காலையில் விழிக்கிற கணமே ஒரு விரட்டல்

அலாரம் மட்டும் அல்ல... வாழ்க்கையும் எழுப்புகிறது

விரல்களில் வண்டி சாவி,

மனதில் வேலைப் பட்டியல் –

இங்கே யாருக்குக் கோபிக்க நேரமிருக்கிறது?


ட்ராஃபிக்கில் எரியும் சிக்னல் கூட

இப்போது சிந்தனையை சுழற்றி விடுகிறது

ஓர் ஆளின் தவறை நோக்கிப் பழிக்க

பக்கத்து இருசக்கர வாகனத்தை நெருங்கவோ,

உள் மூச்சு விரிவடையவோ – நேரமில்லை


வீட்டில் மனைவி ஒரு வார்த்தை சொல்கிறாள்

அதை எதிர்க்க... மனதின் வாசல் திறக்கவே மறுக்கிறது

அலுவலகம் நம் முகத்தில் முகமூடி தைக்கும்

அங்கே கோபம் என்ற பாவனைக்கே கூட சலுகை இல்லை


உண்மையில்…

நாம் வாழ்வது கோபமில்லாத வாழ்க்கையல்ல

நம் கோபத்துக்கே நேரமில்லாத வாழ்க்கை தான்


போராடுதலால் பிழைத்துவந்த பிணைந்த நாட்கள்

எளிமையான உணர்வுகளையும் அலட்டுகின்றன

சில நேரங்களில் அதுவே அயர்ச்சி ஆகின்றன


சில தவறுகள் காற்றாய் பறந்து விடும்

சில வார்த்தைகள் உள்படாமல் போகும்

பொறுமை என்ற ஒன்று வளர்கிறது – தவிர்க்க முடியாமல்


இது புரிதலின் காலம், பதிலடி காலமல்ல

இது நிமிடக் கணக்கில் நிம்மதி தேடும் பயணம்..

இங்கே கோபிக்க வேண்டியதில்லை,

அதற்கு இடமே இல்லையெனும் உண்மை தான் நிலை.


நண்பர்களே என் இனிய எதிரிகளே கொஞ்சம் விலகிப் போய் விடுங்கள் ஏனென்றால் நீங்கள் தரும் வார்த்தைகளிலும் வலிகளிலும் கோபப்பட நேரமில்லை.. மன்னித்து விடுங்கள்


- ஜனனி அந்தோணி ராஜ்

திருச்சிராப்பள்ளி