tamilnadu epaper

தந்தையும் ஆன அன்னை

தந்தையும் ஆன அன்னை


                    உதைப்பந்து விளையாடி வியர்வையில் குளித்த கசகசத்த உடலுடன், ஊஞ்சலில் அமர்ந்து தொலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த நீலாம்பரியின் 

மடியில் படுத்தான்; குகன். நீலாம்பரி, தன், புடவையில் முகம் புதைத்த தன் அருமை பாலகனின் வியர்வை முகத்தைத் தன் சேலைத் தலைப்பினால் ஒற்றி எடுத்தவளின் நெஞ்சம் விம்மியது. மார்பு கனத்து தாய்மை பொங்கியதோ; என நினைத்தவள் கண் கசிந்தது. 

                       குகன் , அவன் தந்தை; ஸ்வாமிநாதனின்

 முகசாடையில் இருந்தது; அவளுக்கு எப்போதும் ஒரு நிறைவைத் தந்தது. அவனைப் போலவே இவன் இரு செவிகளிலும் துருத்திக் கொண்டிருந்த ஓரிரு முடி கற்றைகள்;மேடிட்ட விசாலமான நெற்றி பெரிய கண்கள்; எடுப்பான நாசி. கருமையான மீசை ; இவனுக்கு செந்தூர் ஆண்டவன் பெயரிட வேண்டுமென்றே ' குகன்' என்று பெயரிட்டிருந்தான் ஸ்வாமி நாதன். பிறக்கும் போது அவன் 'செக்க செவேல்'என்று சிவப்பாக இருந்ததினால் ' நீலாம்பரிக்கு 'செந்தூரான்' என்று பெயர் சூட்ட ஆசை. அதனால் செந்தூர் குகன் என்ற பெயர்தான் பிறப்பு சான்றிதழில். குகன் என்று கூப்பிடும் வாய்ப்பு நீலாம்பரிக்கு மட்டும்தான். திருமணமாகி மூன்று வருடங்களிலேயே அவன் மாரடைப்பினால் போய் சேர்ந்து விட்டான். நீலாம்பரியும் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடிந்திருந்ததால், கருணை அடிப்படையில், நீலாம்பரிக்கு ஸ்வாமி நாதனின் பணி கிடைக்க, வாழ்க்கை வண்டி வளத்துடன் எளிதாய் ஓடியது. தன்னையும் அறியாமல் உறங்கிக் கொண்டிருந்த குகனின் முகத்தை வருடியவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.சற்றே துணுக்குற்றவள்;சற்றே

புன்முறுவல் பூத்தாள். குகன் இன்னும் சிறு குழந்தையல்ல‌;இளம் வாலிபம் அவனை நெருங்கிக் கொண்டிருந்ததை அவள் சில நாட்களாக கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.

                        மெதுவாய் குகனை ஊஞ்சலில் படுக்க வைத்தவள், தொலைபேசியில் எதையோ தேடி நிச்சயமான சந்திப்பு நேரத்தை, வரும் ஞாயிறு அன்று உறுதிப்படுத்திக் கொண்டாள்.

                     ஞாயிறு அன்று மாலை மூன்று மணிக்கெல்லாம், குகனோடு, அந்த பெயர் பெற்ற குளிரூட்டப்பட்ட சலூனின் கண்ணாடிக் கதவைத்திறந்து உள்ளே போனதும், "வீ ஹேவ் அன் அப்பாய்ன்ட்மென்ட் இன் த நேம் ஆஃப் மிஸ்டர்.குகன் ஸ்வாமி நாதன்' என்று சொல்லும் நேரம் ஒரு வினோதமான மன நிலையில் நீலாம்பரியும், சற்றே மருட்சியுடன் வெட்கம் கலந்த புன்னகையில் குகனும் இருந்தபடி நேர்பார்வையில் ஒருவருக்கொருவர் சிக்கிக் கொள்ளாமல் இருக்க முயற்சித்தனர்.

                     இத்தனை நாள்களிலும் குழந்தைக்கு அன்னையாய் இருந்த நீலாம்பரி தன்னை இன்று முதல் தந்தையாகவும் மாற தலைப்பட்டாள்.



-சசிகலா விஸ்வநாதன்.