திண்டுக்கல், மே7-
திண்டுக்கல் மாவட்ட போக்குவரத்துத் துறை, காவல்துறை, பள்ளிக் கல்வித் துறை ஆகியன இணைந்து பள்ளி வாகனங்கள் கூட்டாய்வை திண்டுக்கல்லில் நடத்தின.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு ஜூன் மாதம் பள்ளிகள் மீண்டும் திறக்க உள்ள நிலையில், திண்டுக்கல், நத்தம், வேடசந்தூர், வத்தலக்குண்டு வட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
பள்ளி வாகனத்தில் உள்ள படிக்கட்டுகள், கதவுகள், ஜன்னல்கள், அவசரக்கால வழி, இருக்கைகள், வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, தீயணைப்புக் கருவிகள், முதலுதவிப் பெட்டி, சிசி டிவி ஆகியவை முறையாக உள்ளதா எனவும், அரசு குறிப்பிட்டுள்ள 23 விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்றும் திண்டுக்கல் கலெக்டர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கண்ணன், டிஎஸ்பி மகேஷ், தீயணைப்புத்துறை நிலைய ஆய்வாளர் மயில்ராஜ் ஆகியோர் பள்ளி வாகனங்களைச் சோதனை செய்தனர்.
இதில் விதிமுறைகள் சரியாக இல்லாத வாகனங்களுக்கு கால அவகாசம் வழங்கி குறைபாடுகளைச் சரி செய்து மீண்டும் வந்து சோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.