tamilnadu epaper

நறுக்ஸ் நொறுக்ஸ்

நறுக்ஸ் நொறுக்ஸ்

நூல் விமர்சனம் எழுதுவது ஒரு கலை.  அது நூல் பிடித்தது போல ஒரே நேர்க்கோட்டில் பயணித்தால் 'சிகப்பு ரோஜாக்கள்' போல மனதை தொடும் வண்ணம் இருக்கும்.  இதுவும் 'ஒரு கை ஓசை' தான்.ஒரு கை எழுதியதை இன்னொரு கை விமர்சிக்கிறது. ரிஷிவந்தியா என்கிற பாஸ்கர் அவர்கள் தந்த 'நறுக்ஸ் நொறுக்ஸ்' படித்தேன்.'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' என்று சொல்ல ஆரம்பிக்க இது நாவல் அல்ல.  ஒரு விதை அதற்குள்  அடங்கி அமர்ந்திருக்கும் விருட்சமாக போகும் மரம் போல பல ஹைக்கூக்கள் தாங்கிய புத்தகம். ஒரு கூடைப் பூக்களை ஒற்றையாய் அமர்ந்து விற்கும் ஒரு பூக்கார பெண்மணி போல ஒரே புத்தகத்தில் ஓராயிரம் விஷயங்கள்/தகவல்களைச் சொல்வது சாதாரண விஷயமல்ல.திரைத்துறையில் ஒரு வரியில் கதை சொல்வது என்பார்கள். அது போலத்தான் இந்த ஹைக்கூவும்.   படிப்பறிவு இல்லாதவனுக்கும் புரியும் விதமாக படைத்திருக்கிறார்.தாலாட்டு முழுமையாக தெரியாதவள் 'ஆராரோ ஆரிரரோ' பாடினால் குழந்தைக்கு  போதுமே.  இந்த புத்தகம் சாதாரண மனிதனுக்கு கிடைத்த 'ஞானப்பழம்'.

 

ஆரம்பமே 'கலப்பை' கொண்டு உழுது விதைக்கிறார். 'புதிய வார்ப்புகள்'ஏராளமாய் உள்ளே விளைந்து நிற்கின்றன.  பெண்களின்  மாதப் பிரச்சனையை 'மௌன கீதங்கள்' போல வெளியே தெரியாமல் பேப்பர் சுற்றித் தருகிறார். 'இரட்டைக்கிளவி' யை கற்றுத் தரும் களவாடப்படும் தமிழாசிரியரின்  பொருள் இல்லா பணப்பை  'இன்று போய்  நாளை வா' என்கிறது திருடியவனிடம்.   

சட்டென்று எண்களை வைத்து வித்தை காட்டுகிறார்.420 -ஐயும் 916 - ஆக மாற்றிவிடும் 143    - இது அவரின் எண் ஹைக்கூ 100 - காணாமல் போகும்  - இது என் ஹைக்கூ தொடர்ச்சி 

 

சுண்டப்பட்ட நாணயம்... விழுந்தது பூ விதவையின் தலையில்...

 

-இதுதான் 'பாரிஜாதம்' - சொல்லாமல் சொல்கிறார்.

 

இதை நொறுக்குத் தீனியாக நினைத்து முதலில் வேகமாக படித்து முடிக்கலாம். பின்பு  அறுசுவை உணவாக எண்ணி ஒவ்வொன்றாக தனித்தனியாக மெதுவாக படித்துச் சுவைக்கலாம். உணவு சுவையாக இருக்கும் போது ஏதோ ஒன்றில் உப்பு குறைவாக இருக்கலாம் இல்லை கூடுதலாக இருக்கலாம். அதை குறையாக சொல்லக்கூடாது. 

"வெளியே புன்னகை பூத்து உள்ளே உப்பு பூத்து...கோமாளியின் முகமூடி"   -இந்த ஹைக்கூ நினைவில் அடிக்கடி வரும்போது அந்த உப்பு பிரச்சனை உப்பு சப்பில்லா விஷயமாகிடும்.  நல்ல புத்தகங்களை தேடித் தேடி படிக்கும் போது திங்கள் முதல் ஞாயிறு வரையிலான 'அந்த 7 நாட்கள்' மறக்க முடியாத நாட்களாகும்.  இந்த புத்தகத்திற்கு வாழ்த்துரை வழங்கியவர் இயக்குனர் திரு.கே.பாக்யராஜ் அவர்கள்.

 

பாண்டியன் வைகை பதிப்பகம் வெளியிட்ட புத்தகம் இது. இந்த புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் 9629039552

                                                                  ===

-திருமாளம் எஸ்.பழனிவேல்