ஒரு மனிதன் “நல்லவன்” என்று எப்படி தீர்மானிக்கிறோம்……
1. அவன் சுய கட்டுப்பாட்டுடன் நற்குணங்களையும் கொண்டவனாக இருக்க வேண்டும்.
2. அவன் அபாயமான தருணத்தில் வீரத்தை காட்டி அதை விலக்கும் திறமை உடையவனாக அமைய வேண்டும்.
3. எப்போதும் எந்நேரமும் தர்மத்தை கடை பிடித்து பழகியவனாக இருத்தல் வேண்டும்.
4. மற்றவர் அவனுக்கு செய்த நற்காரியங்களை மனதில் நிறுத்தி என்றென்றும் நன்றியுணர்வுடன் வாழ வேண்டும்.
5. எந்த சூழ்நிலையிலும் தன் வார்த்தைகளிலும் நடத்தைகளிலும் உண்மையையும் நேர்மையையும் கடை பிடிப்பவனாக இருக்க வேண்டும்.
6. தன் மனதளவில் எடுத்துக் கொண்ட நல்ல வைராக்கிய முடிவுகளை எப்போதும் கை விடாமல் நிலை நிறுத்தும் சுய கட்டுப்பாட்டுடனும் தைரியத்துடனும் வாழ வேண்டும்.
7. தனது குலத்தின் சட்ட திட்டங்களையும் நெறிகளையும் வாழ்நாள் முழுதும் பின் பற்றி உன்னத நடத்தையுடையவனாக இருத்தல் வேண்டும்.
8. அவனது எல்லா நடவடிக்கைகளும் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நன்மை செய்வதாக அமைய வேண்டும்.
9. பள்ளி பருவம் முதல் வாழ்க்கை பாதை முடியும் வரை முயன்று அனைத்து வித்தைகளையும் கற்றவனாக இருக்க வேண்டும்.
10. மற்றவர்களால் செய்ய முடியாத எந்த காரியத்தை கொடுத்தாலும் திறம்பட வேலை செய்து சிறந்த முடிவை அளிக்க வேண்டும்.
11. எப்போதுமே முகத்தில் புன்சிரிப்பும் உற்சாகமும் நட்பும் நிரம்பி வழியும்படி மற்றவரிடம் பழக வேண்டும்.
12. எக்காரணத்தை கொண்டும் தனது நிதானத்தையும் நேர்மறை தன்மையையும் வீரத்தையும் இழக்காதவனாக இருக்க வேண்டும்.
13. எத்தனை துன்பங்கள், சர்ச்சைகள், பிரச்சனைகள் வந்தாலும் அவைகளை தன்மையுடன் அணுகி கோபம் தன் கண்களை மறைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
14. தன் நற்செயல்களால் மற்றவர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்று பிரகாசிப்பவராக அமைய வேண்டும்.
15. தன்னையும் தாண்டி சிறப்பாக செயல் படுபவர்களை பார்த்து பொறாமை கொள்ளாமல் அவர்களது நற்குணங்களை அலசி தனதாக்கும் திறன் பெற்றவனாக வேண்டும்.
16. தனது நற்பன்புகளாலும் நற்காரியங்களாலும் தேவர்களும் முனிவர்களும் கூட அவனை மதிப்புடனும் மரியாதையுடனும் பார்ப்பவனாக வாழ வேண்டும்.
இந்த 16 கோட்பாடுகளும்தான் ஒரு நல்ல மனிதனாக வாழ நம் புராணங்களும் இதிகாசங்களும் பல பல முறைகள் அறிவுறுத்துபவை.
இவை யாவையும் இல்லா விட்டாலும் பாதியையோ அல்லது கால்வாசியையோ கூட நாம் கடை பிடித்தால் போதும். நம்மை பார்த்து நமது அடுத்த சந்ததியினர் கற்பார்கள். அப்படியே அது ஒரு தொடர் கதையாகி வாழ்க்கையும் உலகமும் ஒரு நாள் சொர்க்கமாகும் நிகழ்வு நடக்கும்.
நாம் அன்று இல்லை என்றாலும் நாம் விதைத்த விதைகள் முளைத்து வளர்ந்து செடியாகி மரமாகி மேலும் மரங்களை வளர்க்க வழி செய்யும் ஒரு பெரும் ஆச்சரியம் நடக்கும்.
அந்த ஆச்சரியத்திற்கு மூல காரணமாக நாம் இருக்கலாமே…….
மேலும் இந்த 16 கோட்பாடுகளும் கடை பிடிக்க முடியாதவையும் அல்ல. அன்றே நமது ரகு குல திலகன் அயோத்தி ராமன் கடை பிடித்து வாழ்வாங்கு வாழ்ந்து காட்டியவையே.
எனவே இன்று முதல் நாமும் முயற்சி செய்வோம். முதலில் சிறிது கடினமாக இருக்கும். பின்னர் நாட்கள் செல்ல செல்ல அவையே பழகி போய் நம் வாழ்க்கை முறை ஆகி விடும்.
ஏனெனில் “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்”
-ரமா ஸ்ரீனிவாசன்.