tamilnadu epaper

நாலு பேருக்கு நன்றி!

நாலு பேருக்கு நன்றி!

படுத்த பாயும், தலையணைகளும் சிதறிக் கிடக்கின்றன

மயான மேடையைச்

சுற்றி.

 

உறங்கினரோ, விழித்திருந்தனரோ,

வலியில் முனகினரோ, இறுதி மூச்சைப் பார்த்த 

 

மெளன சாட்சிகளாய்

அடைத்த பஞ்சு சிதறிக்கிடக்க, மூத்திர வாடையோடு

 

போர்த்திய பழம் போர்வைகள் குவியலாய் மருந்து வாடையோடு .

 

சவத்துக்குப் போர்த்திய சரிகை வேட்டி,புதுச் சட்டை

 

தேறியவற்றைக் கவனமாய் எடுக்கிறான் படித்துறையில் வெளுக்க.

 

உறவுகள் விட்டுச்சென்ற சில்லறை, தேங்காய் பழம், பானைக்குள் மீந்திருக்கும் பொங்கல்

 

 கோடியெல்லாம் சாதாரணமாம்.

கோடித்துணியோடு கொண்டு வந்து போட்டார்கள்.

 

ஊருக்கே பெரிய மனுசனாம், உலகம் முழுக்க சுத்தினவராம்.

 

காருக்குள் குடித்துவிட்டுத் தாறுமாறாய் வந்ததுதான்

 கடைசி யாத்திரையாம்.

 

எரிக்குமுன் கேட்ட செய்தி.

சுமந்த நால்வருக்கு நன்றி சொல்கிறான் சுடுகாட்டுக்கு நடுவே நின்று.

 

வாய்க்கரிசி சோறுபோடுகிறது

வெட்டியானுக்கு.

 

=தனலெட்சுமி பாஸ்கரன்

திருச்சி−21