கருவறை நடை சாற்ற முயன்றவனிடம் அவசரகதியில் கண்ணீரும் கவலையும் அவள் ஓடி வந்தாள்.
சாமீ....
சொல்லுமா ..
பூ கட்டி பாக்கனும் சாமீ ...
சரீ..ம்மா அழாதே பார்த்திடலாம்.
முருகன் உனக்கு நல்ல வாக்கினையே தருவான்
சாமீ எதை எப்படி நினைப்பது முருகன் துன்னூறு தந்தா சம்மதம்னும் குங்குமம் தந்தா வேண்டாம்னும் எடுத்துக்கலாமா?
அப்படியே ஆகட்டும்மா!
திருநீறு பொட்டலம் குங்கும பொட்டலம் மடித்து முருகன் பாதத்தில் வைத்து அவளிடம் இரண்டையும் கொடுத்து ஒன்றை எடுக்கச் சொல்ல....
சாமீ.. நீங்களே ஒரு சீட்டை எடுத்து கொடுங்க என்பவளிடம் அதையே அவன்
எதிர்பார்த்து இருந்ததை போல அவளுக்கு முருகனது சம்மதம் கிடைக்க வேண்டும் என முன்னரே அடையாளமிட்டிருந்த திருநீறு பொட்டலத்தை எடுத்து அவளிடம் நீட்ட
சரீ ..இன்னும் ஏனம்மா அழற என்ன பிரச்சனை ?
சாமீ.. எங்க ஆத்தா கீழே விழுந்து பின் மண்டையில் அடிபட்டு ஆஸ்பத்திரில கிடக்கு..
மூச்சு மட்டும் தான் ஓடிட்டு கிடக்கு..
இதனால வேல வெட்டிக்கெல்லாம் போகாம ஆஸ்பத்திரியிலே உட்கார்ந்து கிடக்கேன்.
அது சரியாக எத்தனை நாள் ஆகும்னு சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டாங்க..
என் குடும்பத்தை காப்பாத்த வேணாமா. நான் வேலைக்கு போனா தானே அது நடக்கும் ?அதனாலதான் சாமி கிட்ட குறி கேட்டேன்.. சாமி உத்தரவு கொடுத்திடுச்சு..
இன்னிக்கு டாக்டரை அய்யாட்ட போய் கேட்க போறேன்..
ஆத்தாவை கொன்னுடுன்னு...
அதான் சாகடிச்சிடட்டுமா அப்படின்னு முருகன்ட்ட கேக்க வந்தேன்..
அவரும் உத்தரவு கொடுத்திட்டார்
என்றாள்.
வெளிரிப்போன அர்ச்சகர் முகத்தை பார்த்தபடி!
ஆர். சுந்தரராஜன்,
சிதம்பரம்-608001.