tamilnadu epaper

பொட்டல் புதூர்...

பொட்டல் புதூர்...


தென்காசி மாவட்டத்தில் பிரபல அந்தஸ்து பெற்ற அற்புதமான அழகிய கிராமம் எங்கள் ஊர்...


காலம் காலமாக மத ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்கும்

பெயர் பெற்றது எங்கள் ஊர் என்றால் கொஞ்சமும் மிகை இல்லை....

காரணம்...

ஏறக்குறைய இந்துக்களும் இஸ்லாமியரும் சம அளவில் இருந்தும் 

இதுவரை எங்கள் ஊரில் மத பேதத்தை 

மையமாக வைத்து எந்தவொரு அசாம்பாவிதமும் நடந்தது இல்லை என்பதை பெருமிதத்தோடு கூறிக் கொள்ளலாம்.

ஆண்டு தோறும் எங்கள் ஊர் முகையதீன் ஆண்டவர் பள்ளி வாசலில் நடக்கும் கந்தூரிப் பெருவிழா பிரசித்தம்.

தென் மாவட்டங்களில் இருந்து மட்டுமல்ல, கேரளாவில் இருந்தும் கணிசமான எண்ணிக்கையில் 

பக்தர்கள் வருவார்கள்.

இங்குள்ள தீப அலங்கார திடலில் கந்தூரி கொடி ஏறிய மறுநாள் நடக்கும் தீபத் திருநாள் மிகவும் முக்கியத்துவம் பெற்றது.சுற்று வட்டார கிராமங்களில் இருந்து

அனைத்து சமுதாய மக்களும் அணி திரண்டு வந்து, நான்கு பக்கமும் வரிசையாக வைக்கப் பட்டிருக்கும் சட்டி விளக்கில், நெய் ஊற்றி வழி படுவார்கள். 

இன்னும் சரியாக சொன்னால் ஆண்டு தோறும் விமரிசையாக நடைபெறும் இந்த கந்தூரி திருவிழா, இந்த ஊரின் மத நல்லிணக்கத்துக்கு

மட்டுமல்ல... சுற்று வட்டாரத்திலும் மத ஒற்றுமை தொடர்ந்து நிலவுவதற்கு காரணமாக இருக்கிறது என்றால் மிகையில்லை.


இந்த சிறப்புக்கு கட்டியம் கூறும் வகையில் இது சார்ந்த இன்னொரு பெருமையும் எங்கள் ஊருக்கு உண்டு.


போரில்லா உலகம் --

பேரன்பு 

என்ற சமூக நலன் சார்ந்த அமைப்பு கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆரவாரம் எதுவுமில்லாமல் அமைதியாக தொடர்ந்து இயங்கி வருகிறது.


போர் இல்லாத 

போர் அச்சம் இல்லாத

போர்த் தளவாடம் இல்லாத 

புதிய பூமி மலரட்டும் 

என்ற உயரிய நோக்கத்தை இலக்காக வைத்து 

இயன்ற வழிகளில் எல்லாம் செயல் பட்டு வருகிறது.


எங்கள் ஊரின் இரு பக்க நுழை வாயிலில் 

இதை வலியுறுத்தும் வகையில் வாசகம் எழுதிய போர்டுகள் நிறுவப் பட்டுள்ளன.


இந்த அமைப்பின் நிறுவனர் நெல்லை குரலோன் அவர்களிடம் உரையாடிய போது...


" போர் மனித அநாகரீகத்தின் உச்சம்.

இன்னும் சரியாக சொன்னால் ஆறறிவு பெற்ற மனிதன் அறிவியல் துணை கொண்டு மனித குலத்தை பண்டைய கற்கால நிலையில் இருந்து கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத மிகப் பெரிய உயரத்துக்குக் கொண்டு வந்து விட்டான். ஆனாலும் ஆதியில் இருந்த 

மிருக நிலையில் இருந்து இந்த ஏஐ தொழில்நுட்ப புரட்சி காலத்திலும் அவனால் 

விடுதலை பெற முடியவில்லை என்பது 

அவமானம் மிகுந்த நிலை. இதைக் கருத்தில் கொண்டு தான் போரில்லா உலகம் -- பேரன்பு என்ற அமைப்பை எங்கள் ஊரில் தொடங்கினோம்.

கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு எங்கள் ஊரில் நடந்த கிராம சபை கூட்டத்தில்,

'எங்கள் அமைப்பின் சார்பாக, ' போரில்லா உலகம் அமைய வேண்டும் என்ற பிரகடனத்தை தீர்மானமாகக் கொண்டு வந்தோம்.

கிராம சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் ஒரு மனதாக 

நிறைவேற்றப்பட்டது.

உலக அமைதிக்காக ஒரு முன்மாதிரி யான 

காரியத்தை செய்த ஆத்ம திருப்தி கிடைத்தது.

பஞ்சாயத்து முன்னாள் 

இந்நாள் பஞ்சாயத்து தலைவர்கள், உள்ளூர் முக்கிய பிரமுகர்கள்

முன்னிலையில் ஊரின் இரு நுழைவாயில் களிலும் 

போரில்லா உலகம் பேரன்பு அமைப்பின் 

கொள்கை வாசகங்கள் 

எழுதப்பட்ட போர்டுகளை நிறுவி 

கிராம மக்களிடையே விழிப்புணர்வை உண்டு பண்ணினோம்.

பொதுமக்களிடம் பலத்த ஆதரவு கிடைத்தது மகிழ்ச்சி க்குரிய விஷயம்.


போரில்லா உலகம் பேரன்பின் ஒவ்வொரு முயற்சிக்கும் எங்கள் ஊர் மக்களும் பொறுப்பான நண்பர்களும் எந்தவொரு எதிர் பார்ப்பும் இன்றி 

ஆதரவுக் கரம் நீட்டி 

அன்பால் அரவணைத்து வருவதையும் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.


இந்த ஆகப் பெரிய காரியத்தை நிறைவேற்ற இரண்டே இரண்டு விஷயங்களை

மட்டும் முன் வைக்கிறோம்.


ஒன்று... பிரார்த்தனை..

பிரார்த்தனையால்...

கூட்டுப் பிரார்த்தனை யால் முடியாதது என்று உலகில் எதுவுமே கிடையாது.

உள்ளார்ந்த ஈடுபாட்டில் நாம் மனச் சுத்தத்தில் எந்தவொரு பிரதிபலனும் எதிர் பாராமல் செய்யும் பிரார்த்தனை நிச்சயம் நிறைவேறும்.

இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்ட பிரபஞ்ச பேருண்மை.

ஆகவே தான் எங்கள் அமைப்பின் சார்பாக 

'ஒரு நிமிஷம், ப்ளீஸ்.'

என்ற வேண்டுகோளை முடிந்த வழிகளில் எல்லாம் சொல்லி வருகிறோம்.

ஒரு நாளுக்கு 1440

(60x24) நிமிடங்கள்.

உங்கள் நலம்... உங்கள் குடும்ப நலத்துக்காக 1439 நிமிடங்களை பயன் படுத்திக் கொள்ளுங்கள்...

ஒரே ஒரு நிமிடத்தை 

மட்டும் உலக நன்மைக்காக -- இந்த உலகத்தில் இருந்து போர் என்னும் பொல்லா அரக்கனை வேரோடு ஒழித்துக் கட்டும் உன்னதமான உயரிய காரியத்துக்காக

ஒதுக்கி, மனப்பூர்வமாக பிரார்த்தனை பண்ணுங்கள் என்று சொல்லி வருகிறோம்.

ஒரு நிமிடப் பிரார்த்தனையால் போரை ஒழித்து விட முடியுமா என்ன...

என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம்.

அதற்கும் விடை வைத்திருக்கிறோம்.

உணர்வுப் பூர்வமாக 

உள்ளன்புடன் நாம் பண்ணும் பிரார்த்தனையை இந்த பிரபஞ்சம் நிச்சயம் உள்வாங்கி 

அதற்கான தீர்வை --

பலனை நிச்சயம் அளிக்கும்.


எப்படி என்கிறீர்களா..?

போரின் கொடுமையை இந்த 

உலகில் உள்ள மக்கள் அனைவரும் அறிவார்கள்.

மக்களே உணரும் போது உலகத் தலைவர்கள் அறியாமல் இருப்பார்களா?

நாம் உளப் பூர்வமாக 

பண்ணும் பிரார்த்தனை 

இந்த உலகத் தலைவர்கள் அனைவரையும் நிச்சயம் ஒன்றிணைக்கும்.

சில வருடங்களுக்கு முன்னால் ஒரு கொரோனா வைரஸ் 

படுத்திய பாடை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்...உலகையே தலைகீழாகப் புரட்டிப் போட்டதை நாம் அனைவரும் அறிவோம்.அந்த

கால கட்டத்தில் நாம் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத காரியங்கள் எல்லாமே நடந்தனவே... எப்படி?

காலத்தின் கட்டாயம் என்று அதைச் சொல்லலாம்...

அந்த மாதிரி யான மாற்ற நிகழ்வு எந்த நொடியிலும் இங்கே நிகழலாம்... அந்த சூழ்நிலையில்...

காலத்தின் கட்டாயமாக...

உலகில் உள்ள சுமார் 

200 நாட்டுத் தலைவர்களும் ஒன்றுகூடி...நேரில் இல்லாது போனாலும்..

இணைய வழியில் ஒன்று கூடி ஒரே ஒரு தீர்மானம்... அதாவது 

எந்த நாடும் எந்தக் காரணம் கொண்டும் எந்த நாட்டோடும் போர் தொடுக்கக் கூடாது...

அவ்வளவுதான்...

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட கணத்தில் போரில்லாத புதிய பூமி என்பது சாத்தியம் ஆகி விடும் என்பது தான் எங்களின் அசைக்க முடியாது..."

திட சிந்தனையில தெளிந்த நம்பிக்கை யில் தூய அன்பில் 

ஒட்டுமொத்த மனித குல நன்மைக்காக 

உற்சாகம் குன்றாமல் 

உறுதியுடன் நெல்லை குரலோன் கூறுவதைக் 

கேட்கும் போது நெஞ்சம் சிலிர்க்கிறது.

போரில்லா புதிய பூமி

நிச்சயம் மலர்ந்தே தீரும் என்ற சிந்தனை நமக்குள்ளும் நங்கூரம் பாய்ச்சுகிறது.


இந்த மகத்தான இலட்சியத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படும் 

போரில்லா உலகம் -- பேரன்பின் தொடக்கப் புள்ளியாக -- மையமாக 

எங்கள் ஊர் பொட்டல் புதூர் இருப்பதில் எங்களுக்குப் பெருமை.



குன்றா அன்புடன் ஆ.ராமகிருஷ்ணன்

பொட்டல் புதூர்