tamilnadu epaper

மறந்து போன விளையாட்டு

மறந்து போன விளையாட்டு

நானும் இங்கே "தினம் ஒரு விளையாட்டு" படித்துக் கொண்டே இருந்தேன். ஒருவராவது ஏழாங்கல் பற்றி எழுதினார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். நான் படிக்கத் தவறி விட்டேனா என்றும் தெரியவில்லை. இருந்தும் எங்கள் காலத்தில் ஆடும் இந்த ஒரு ஆட்டத்தை பற்றிய விளக்கத்தை ரொம்பவும் விவரமாக கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அந்தப் பாடல்களை ஞாபகத்தில் கொண்டு வருவதற்கு அவ்வளவு கஷ்டப்பட்டு விட்டேன். கிட்டத்தட்ட ஓரு மாதம் ஆயிற்று. ஞாபகம் வர வர குறிப்பு எடுத்துக் கொண்டேன். இப்போது உள்ளே போகலாம் வாருங்கள்


ஏழாங்கல் என்கிற அருமையான விளையாட்டு போனது எங்கே? 60- 70களில் கோடை விடுமுறைகளில் மதிய சாப்பாட்டை அள்ளிப்போட்டு கொண்டு ஒரு வீட்டு திண்ணையைப் பிடித்து நான்கு பேர் உட்கார்ந்து ஆட ஆரம்பித்தால் சாயந்திரம் வரைக்கும் நேரம் போவது தெரியாது. இதில் ஜெயிப்போர் அவர்களுக்கு என்ன தெரியுமா பரிசு? ஆளுக்கு ஒரு பெரிய சோழியை தோற்றவர் கொடுக்க வேண்டும். நாலு சோழி பரிசு கிடைத்து விட்டால் சோழியாட்டம் ஆடலாம் அதற்குத்தான்.


 அது என்ன ஏழாங்கல் விளையாட்டு வாருங்கள் பார்க்கலாம்.


- ஏழு கற்கள் இருக்கும்

- நான்கு அல்லது ஆறு பேர் வரையும் ஆடலாம். ஆறு பேர் கிடைக்காவிட்டால் இரண்டு பேரும் ஆடலாம். அதுவும் கிடைக்காவிட்டால் தனியாக உட்கார்ந்து ஆடலாம்.


- சமமான அளவுள்ள ஏழு கருங்கல் சேகரிக்க வேண்டும். அதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் அந்த காலத்தில் வீடு கட்ட/ரோடு போட கொட்டி வைத்திருக்கும் கருங்கல்கள் வழவழவென்று அளவு எடுத்தார் போல் இருக்கும். ஏழு கற்கள் எடுத்தாகிவிட்டதா? 


- முதலாம் ஆட்டக்க்காரர் உட்கார்ந்து ஆரம்பிப்பார்.


* ஒரு கல் கையில் ஆறு கல்லை கீழே வைக்க வேண்டும். ஒரு கல் மேலே போகும்போது ஆறு கல்லை கீழே வைக்க வேண்டும். அதற்கான பாட்டு இதோ. " பொத புதைக்கிற செட்டிக்கு பிறக்கற மாசம் கல்யாணம்" - ஒரு கல் மேலே போயிட்டு வருவதற்குள் அந்த ஆறு கல்லையும் வாரி கைக்குள் கொண்டு வர வேண்டும்.


* இப்பொழுது ஒரு கல் கையில் வைத்துக் கொள்ள வேண்டும் ஆறு கல்லை கீழே உருட்ட வேண்டும். அதற்கான பாட்டு இதோ. "ஈறி ரெண்டு மாதா ரெண்டு மல்லிகை பூ செண்டு" என்று சொல்லிக்கொண்டு ஒரு கல் மேலே போகும். இரண்டு இரண்டு கற்களாய் மூன்று முறை வாரி கைக்குள் கொண்டு வர வேண்டும்.

* மூன்றாவதாக ஆறு கல்லையும் கீழே உருட்டி விட வேண்டும் ஒரு கல் கையில் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான பாட்டு "முக்குட்டு சிக்குட்டு பாவக்கா முள் இல்லாத ஏலக்கா". மூன்று மூன்றாக இரண்டு முறை கைக்குள் வார வேண்டும்

* நாலாவதாக ஆறு கல்லையும் கீழே உருட்ட வேண்டும் ஒரு கல் கையில் இருக்க வேண்டும். அதற்கான பாட்டு இதோ. "நான்கெடுத்து இரண்டு எடு நாலாயிரம் பேரெடு". அதாவது முதலில் ஒரு கல்லை மேலே அனுப்பி நாலை கைக்குள் வார வேண்டும் பிறகு இரண்டை வார வேண்டும்.

* ஐ ந்தாவதாக ஒரு கல்லை கையில் வைத்துக் கொண்டு ஆறு கல்லையும் கீழே உருட்ட வேண்டும். அதற்கான பாட்டு இதோ "ஐ வாள் அரக்கு மஞ்சள் பம்பாய் சிலுக்கு மஞ்சள்" என்று சொல்லிக்கொண்டு முதலில் ஐந்து வாரி விட்டு பின்பு ஒன்றை வாரி வேண்டும். 


* அடுத்து ஆறாவதாக கையில் ஒரு கல் வைத்துக் கொண்டு ஆறையும் கீழே உருட்டி விட வேண்டும். அதற்கான பாட்டு இதோ. "அக்குறும்பு செஞ்சான் தோப்புல அழுவராண்டி மாப்பிள்ளை" என்று பாடி மூன்று மூன்றாய் இரண்டு முறை வார வேண்டும். 

* அடுத்து ஏழாவதாக என்னவென்றால் கையில் ஒரு கல் வைத்துக் கொண்டு கீழே ஆறையும் உருட்டி விட வேண்டும். அதற்கான பாட்டு இது. " ஏழைப் பெண் ஜானகி எங்கள் பெண் ஜானகி மாட்டுப்பெண் மகராசி" சொல்லிவிட்டு மூன்று,இரண்டு, ஒன்று வரிசையில் கற்களை மூன்று முறை வார வேண்டும்.

* அடுத்து கொஞ்சம் கஷ்டம். மூன்று மூன்று கற்களை இரண்டு பக்கமும் வைத்து விட்டு கையில் ஒரு கல் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கல் மேலே போகும் போது இடது கையாலும் வலது கையாலும் அந்த மூன்று மூன்று கற்களை ஒரே சமயத்தில் வார வேண்டும். இரண்டு கைகளும் வேலை செய்யும். அதற்கான பாட்டு இது. " எட்லாங் கட்டை(1) இரு கண்ணும் கொட்டை(2), கம்பன் தட்டை கலகலனு வேகுது (2) சோத்து பட்டை சொள சொள னு வேகுது"(4) சொல்லிக்கொண்டே நான்கு முறை எடுக்க வேண்டும். 

* அடுத்து ஒன்பதாவது இது மிகவும் சுவாரசியமாக இருக்கும். கையில் ஒரு கல் வைத்துக் கொள்ள வேண்டும் கீழே ஆறு கல்லையும் வைத்துவிட வேண்டும். எந்த கல்லையும் முதலில் வார வேண்டாம். கீழே வைத்திருக்கும் ஆறு கல்லை சுற்றி சுற்றி இரண்டு கைகளையும் தட்ட வேண்டும் அப்போது கையில் உள்ள கல் மேலே போக வேண்டும். கைகளை தட்டிக்கொண்டே அதை பிடிக்க வேண்டும் அதற்கான பாட்டு இதோ. " ஆலா ஆலா, அரசாலா, டும்டும்டும், தோசை கல்லு, திருப்பி போட்டா, திண்டுக்கல்லு " கடைசியில் ஒரு கல் மேலே போட்டு ஆறையும் கையால் வாரி எடுக்க வேண்டும். எதிலும் எந்தக் கல்லும் கீழே விழக் கூடாது.

 இந்த ஒன்பது முடிந்தவுடன், கடைசியில் நிறைவாக ஒரு கல்லை எப்படி மேலே போட்டு ஆரம்பித்தோமோ அதே போல ஒரு கல்லை மேலே போட்டு கீழே ஆறு கல்லையும் கீழே வைத்து திரும்பவும் கீழே இருந்து ஆறு கல்லையும் வாரி எடுத்து கையில் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான முடிவுப்பாட்டு. " ஆடி முடிச்சுப்புட்டேன் அரசனாகவும் ஆகிவிட்டேன், உப்பு ஒன்று வெச்சுப்புட்றேன் என்று சொல்லவும் அவர் கணக்கில் ஒரு சோழி சேர்ந்து கொள்ளும். இந்த சோழியை அந்தத் டீமில் யார் தோற்கிறார்களோ அவர்கள் கொடுப்ப வேண்டும். அதாவது கல் கீழே விழுந்து பிடிக்காமல் போனவர்கள் தோற்றவர்கள். அதேபோல எல்லாக் கல்லையும் வாரும் போது ஒரு கல்லும் தவறக் கூடாது. 


 அந்த காலத்தில் இது உட்கார்ந்து கொண்ட ஆடுவோம் ஆடுவோம். இங்கு மங்கும் நகர்ந்து நகர்ந்து திண்ணையை சுத்தம் செய்து விடு வோம். குப்பையை கூட்ட வேண்டிய அவசியம் இல்லை அத்தனை தெருப் புழுதியும் ஆடையில் ஒட்டிக்கொள்ளும்.


 நாங்கள் இந்த விளையாட்டுக்கு சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள். அப்படி ஒரு விளையாட ஆசைப்பட்டால் அவர்கள் எங்களுக்கு பக்கோடா வாங்கித் தர வேண்டும்.

 மிகவும் பசுமையான நினைவுகள்.